படிக்கத்தான போறீங்க..! கண்டக்டரால் கொந்தளித்த மாணவிகள் | Students protest agains Bus conductor in Ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (21/07/2017)

கடைசி தொடர்பு:20:44 (21/07/2017)

படிக்கத்தான போறீங்க..! கண்டக்டரால் கொந்தளித்த மாணவிகள்

'படிக்கப் போகிறீர்களா இல்லை, வேறு எதுக்கும் போறீங்களா' என்று பேருந்து நடத்துநர் மாணவிகளைப் பார்த்துக் கேட்டதால் ஆவேசத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மாணவ மாணவிகள். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. 

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தஞ்சாவூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களுக்கு பேருந்தில் சென்று படித்துவருகின்றனா். பள்ளிநேரத்தில் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும் என்று முன்பே பலமுறை கலெக்டரிடம் மனுகொடுத்து வந்துள்ளனர். ஆனால், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இன்று பள்ளி மாணவர்கள்  எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறி பஸ்பாஸ் காட்டியுள்ளனர். இந்த பஸ்சில் பாஸ் அனுமதி இல்லை என்று கூறிய நடத்துநர், 'படிக்கப் போகிறீர்களா இல்லை, வேறு எதுக்கும் போறீங்களா' என மாணவ மாணவிகளை தரக்குறைவாக திட்டியதால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் திருமானூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை முன்னின்று நடத்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க சண்முகசுந்தரத்திடம் பேசினோம். "தினமும் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்காக திருமானூரிலிருந்து அரியலூர், திருச்சி, தஞ்சாவூருக்கு 20 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இப்போது10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பேருந்து கிடைக்காமல் படியிலும், பேருந்து மேற்கூரையிலும் பயணம் செய்யவேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக சாதாரண பேருந்தைக்கூட எக்ஸ்பிரஸ்னு போட்டு ஓட்டுவதால் மாணவ மாணவிகளைப் பேருந்தில் ஏறவிடுவதில்லை. இன்று மாணவிகள் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஏறியபோது மாணவிகளிடம் டிக்கெட் கேட்டுள்ளார் கண்டக்டர். அதற்கு மாணவிகள், பஸ்பாஸை காட்டியுள்ளனர். எந்தெந்த பஸ்ல ஏறணும்னு உங்களுக்கு தெரியாதா. நீங்க படிக்கத்தான் போறீங்களா, இல்லை வேற எங்கும் போறீங்களானு கேட்டதும், அந்த பொண்ணு அழுதுகிட்டே பெற்றோரிடம் சொன்னதும், நாங்கள் திருமானூர் பகுதிகளில் நடத்துநரையும், போக்குவரத்துறையும் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். மாணவியை தவறாகப் பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்கள். அதன் பெயரில் நாங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.