எங்கே போனது எண்ணூர் ஆறு...? ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Controversial RTI answers about Ennore River

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (21/07/2017)

கடைசி தொடர்பு:18:52 (21/07/2017)

எங்கே போனது எண்ணூர் ஆறு...? ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சென்னையில் உள்ள எண்ணூர் ஆறு காணமல் போய்விட்டதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.  

ennore river
 

எண்ணூர் ஆறு தொடர்பாக சமூக ஆர்வலர் ஜேசு ரத்தினம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 2009-ம் ஆண்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது ஆர்.டி.ஐ கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், எண்ணூர் ஆற்றின் CRZ (Coastal Regulation Zone) வரைபடம் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வரைபடம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். அதன்படி எண்ணூர் ஆற்றின் 6,469 ஏக்கர் பரப்பளவு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 1-ன் கீழ் மேம்பாடு அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலையாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017-ல் எண்ணூர் ஆறு தொடர்பாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிடைத்துள்ள வரைபடத்தில் எண்ணூரில் ஆறே இல்லாதது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. 

எண்ணூர் ஈரநிலங்கள் ஆக்கிரப்பதைப் பற்றி சர்ச்சை ஏற்பட்ட பின் இந்த புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ’இரண்டு வரைபடங்களுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டதால், சுற்றுச்சூழல் துறையால் கொடுக்கப்பட்ட இரு தகவல்களில் ஒன்று பொய்யானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தவறான தகவல் அளிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்’ என்று ஜேசு ரத்தினம் தெரிவித்துள்ளார். 2009-ல் பெறப்பட்ட வரைபடம் 16 கி.மீ உள்ளடக்கியுள்ளது. அந்த வரைபடம் கடற்கரை மேலாண்மை திட்டத்துடன் ஒத்துப்போகிறது. 2017-ல் பெறப்பட்ட வரைபடமோ 13 கி.மீ மட்டுமே உள்ளடக்கியுள்ளது. வரைபடத்தில் ஆறே இல்லாதது போலும் தோற்றமளிக்கிறது. எண்ணூர் மீனவர்கள் இதுதொடர்பான ஆவணங்களைப் பத்திரிகை மாநாட்டில் வெளியிட்டு, ’மாநில கடற்கரை மேம்பாட்டுக் குழுமம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயல்பாட்டைக் கண்காணிக்க ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க