நீள ஆறு... வற்றாத ஆறு... நிஜத்துல இருக்கிற ஆறு மேப்ல காணோங்க..!

'கண்ணும் கண்ணும்' எனும் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, "அய்யா வட்டக் கிணறு, வத்தாத கிணறு, அந்த கிணத்தைக் காணோம்" என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காமெடி மிகவும் பிரபலம். அந்த வரிசையில் "விமானத்தைக் காணோம், குளத்தைக் காணோம், கழிப்பறையைக் காணோம்" என  நிஜ சம்பவங்களும் நடந்தது உண்டு. அந்த வரிசையில் இப்போது சென்னையில் ஓடும் ஓர் ஆற்றின் ஒரு பகுதியை அரசின் மேப்பில் காணவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், குறிப்பாக 1000 ஏக்கர் நிலத்தில் பாய்ந்த ஆறு காணாமல் போய் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற "சென்னை எண்ணூர் ஆற்றைக் காப்போம்" எனும் தலைப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத்தகவல் வெளியானது.

எண்ணூர் ஆறு

சுற்றுச்சூழல் ஆர்வலர், நித்யானந்த ஜெயராமன் பேசும்போது "2009-ம் ஆண்டு பெறப்பட்ட ஆர்.டி.ஐ-யின் படி, 1996-ம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் எண்ணூர் ஆற்றின் 6469 ஏக்கர் நிலம் சி.ஆர்.இசட் 1 -ன் கீழ் அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர் நிலையாகவும் காண்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது 2017-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி, முன்னர் காண்பிக்கப்பட்டுள்ள பகுதியில் ஆறே இல்லாதது போல காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகவலில் ஒரு தகவல் பொய்யானது... மேலும் ஆர்.டி.ஐ-யில் போலியான தகவல் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

2009-ம் ஆண்டு பெறப்பட்ட வரைபடத்தில் 16 கி.மீ ஆற்றுப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ஆனால், 2017-ம் ஆண்டு பெறப்பட்ட வரைபடத்தின்படி 13 கி.மீ நீளம் மட்டுமே காட்டப்பட்டு ஆறே இல்லாத வகையில் காட்டப்பட்டுள்ளது. இதைச் செய்தது முழுவதும், மாநில கடற்கரை மேம்பாட்டுக் குழுமம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. இவர்களின் செயல்பாட்டைக் கண்காணித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூர் ஆறு ரியல் எஸ்டேட்டாக மாறினால் வடசென்னை நீர் நிற்கும் பகுதியாக மாறிவிடும். 2015-ல் அடையாற்றில் ஏற்பட்ட ஒரு வெள்ளத்தையே நம்மால் எதிர் கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால், கொசஸ்தலையாறு ஆறானது கூவமும், அடையாறும் சேர்ந்து பாய்வதற்குச் சமம். அவ்வளவு பெரிய ஆற்றை மறித்து நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இதனால் அடுத்து ஏற்படப்போகும் வெள்ளத்தைத் தடுக்க இப்போதே மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கிடைத்திருக்கும் வரைபடம் ஆற்றை மறைக்கும் முயற்சியாகக் காட்டப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு போடப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில் ஒரு கடிதம் இடம் பெற்றுள்ளது. 1997-ம் ஆண்டு எழுதப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் கடிதம்தான் அது. அதில், எண்ணூரில் பெட்ரோ கெமிக்கல் பூங்காவை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசால் கோரப்பட்ட சில மாற்றங்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்தப் பதிலில், 1996-ம் ஆண்டு இந்திய அரசின் நீர்நிலை வரைபடம் வரைபவரால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, எண்ணூர் ஆற்றின் உப்பங்களின் எல்லைகளை மாற்றி தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், உப்பளங்களை சி.ஆர்.இசட் வரைபடத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அமைச்சகம் நிராகரித்தது. இந்தத் தகவலை மீறி நிலம் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் உரிமை ஆணையத்துக்கு இரண்டு புகார்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை விட மாட்டோம்" என்றார்.

ஆக்கிரமிப்பு


சென்னையில் காணாமல் போன ஏரிகள், சதுப்பு நிலங்கள் விஷயத்தில் ஒரு முடிவுகள் எட்டப்படாத நிலையில், இதற்காக ஆர்.டி.ஐ தகவல்களின் மூலம் ஆதாரங்களை நிரூபித்திருக்கிறார்கள். காணாமல் போன ஆற்றுப்பகுதியைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் தமிழக அரசு பதில் சொல்லப் போகிறதா... அல்லது வழக்கம் போல மவுனம்தான் காக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!