வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (21/07/2017)

கடைசி தொடர்பு:19:37 (21/07/2017)

'பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடக்காது என்று உறுதியளிக்க முடியாது...' அமைச்சர் அன்பழகன்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இதனிடையே, மருத்துவப் படிப்புகளைப்போல பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்திருந்தது.

அன்பழகன்


இதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதையடுத்து, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா, சென்னை லயோலா கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். 


இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன், "அடுத்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில், நுழைவுத் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று என்னால் உறுதியளிக்க முடியாது. மற்ற மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் போது தமிழகமும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனாலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். மேலும், முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு, தமிழக அரசு நடத்தும் டான்செட் தேர்வே போதுமானது என மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளோம்" என்றார்.