Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எங்க பொண்ணுகளுக்கு கல்யாணமே கனவுதான்!' - கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் மறுபக்கம் #Spotvisit

வட சென்னையில் இருக்கும் கொடுங்கையூரில்தான் சென்னையின் பெரும் பகுதி குப்பைகள் கொட்டப்படும் 300 ஏக்கர் பரப்பளவிலான கிடங்கு இருக்குறது. மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் இங்கு இருக்கும் குப்பை மேட்டின் உயரம் மட்டும் அதிகரித்துக் கொண்டேதான் போகும். தன் கொள்ளளவைத் தாண்டிய இந்த குப்பைக் கிடங்கின் ஏதாவது ஒரு மூலையில் தீ கனன்று கொண்டுதான் இருக்கும். பகலிலேயே கொசுக்களுக்கு பஞ்சமில்லாத இந்த இடத்தில் ஒரு நைட் விசிட் அடித்தோம். வட சென்னைப் பற்றி நன்கு அறிந்த நபர் ஒருவருடன், நள்ளிரவில் கொடுங்கையூர் குப்பை வளாகத்துக்குள் நுழைந்தோம். 

கொடுங்கையூருக்கு குப்பை கிடங்கு வந்த கதையை விளக்கினார் உடன் வந்த வடசென்னை நபர். "எதற்காக இதை கொடுங்கையூர் குப்பைக் கிடங்குன்னு சொல்றாங்கன்னு எனக்குப் புரியல. கொடுங்கையூர் ஒரு கிலோ மீட்டர் தள்ளித்தான் ஆரம்பிக்குது. இது வியாசர்பாடி லிமிட்டில இருக்கிற ஒரு பகுதி. இந்த இடத்த முதலில் என்ன சொல்லி வாங்கினாங்க தெரியுமா...? பஸ் ஸ்டேண்ட் அமைக்கப் போறாம்னு. கோயம்பேடு பஸ் ஸ்டேண்ட் இங்கதான் வர்றதா இருந்துச்சு. அப்படி சொல்லித்தான் நிலமெல்லாம் வாங்குனாங்க. ஆனா, இப்போ இங்க இருக்கிறதெல்லாம் வியாதியை பரப்பும் வெறும் குப்ப மேடு" என சலித்துக்கொண்டார்.

குப்பைக் கிடங்கின் நுழைவாயில் 3-க்குக் கீழ் கொசு வலையை முழுவதும் தன் உடலுடன் சுற்றியபடி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மேலும் சிலர் எந்த கூடுதல் போர்வையும் இல்லாமல் படுத்திருந்தனர். அதை நோக்கி போய்க்கொண்டிருந்தபோதே, "இந்த கெடங்குக்கு எதிர்த்தாப்லே இருக்கிற ஹவுசிங் போர்ட்ல உள்ள ஒவ்வொரு வீட்டிலேயும் 24 மணி நேரமும் கொசுவத்தி எரிஞ்சுகிட்டே இருக்கும் தெரியுமா? யார் வீட்டுக்கு வேணும்னாலும் போய்ப் பாருங்க. கொசுவத்தி இல்லாத ரூமே இருக்காது. இங்க இருக்கிற என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு பொண்ணு பார்த்தாங்க. எல்லாம் ஓ.கே ஆனதுக்கு அப்புறம், பொண்ணு வீட்டில இருந்து, இந்த ஏரியாவுல இருக்கிற வரைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம வேறு ஏரியாவுக்குப் போன பிறகுதான், அவன் கல்யாணமே நடந்துச்சு. இந்த ஏரியா பொண்ணுங்களுக்கு பொதுவா கல்யாணமே ஆகாது. பொண்ணு பார்க்க வர்றவங்க, இடத்தைப் பார்த்ததும் சொல்லாம ஓடிப் போயிடறாங்க. குழந்தைப் பேறும் தடைபடுது. ஆண்மைக் குறைவு உள்பட பலவித வியாதிகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்களுக்கு கர்பப்பை இறங்கிடுச்சு" என வேதனையோடு பேசினார். 

இதையடுத்து, நம்மிடம் பேசிய வட சென்னையைச் சேர்ந்த விஜய், "பருவநிலை மாறினாலும், ஈ மொய்ப்பதும் கொசு கடிப்பதும் இங்கு ஓயவே ஓயாது. மழைக் காலங்களில் குப்பைமேட்டிலிருக்கும் பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் வந்து அடைத்துக் கொள்ளும். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் முக்கிய நுழைவாயிலுக்குப் பக்கத்தில் பார்த்தால், ஒரு மிகப் பெரிய ஓட்டை இருப்பது தெரியும். இதன் வழியாகத்தான் மழை காலங்களில், கிடங்கிலிருந்து அதிகபட்ச குப்பைகள் கால்வாய்களில் கலக்கின்றன. மழை நேரத்தில் இப்படிப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றதென்றால் வெயில் காலத்தில், குப்பைகளை எரிப்பதால் கிளம்பும் புகையும் சாம்பலும் எங்கள் மக்களுக்கு நரக வேதனை. வியாசர்பாடியைத் தாண்டியும் இதன் தாக்கம் இருக்கும். இங்கு குப்பை கொளுத்தினால் பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் மக்களும், 'கொடுங்கையூர்ல குப்பைய கெளர ஆரம்பிச்சிட்டானுங்க' என வசைபாட ஆரம்பித்துவிடுவார்கள். இதன் வீரியம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கான மிகச் சிறிய உதாரணம் இது" என்றார் வேதனையோடு. 

சென்னையின் மிகப் பெரிய குப்பைக் கிடங்கான இங்கு, பாதுகாப்புப் பணிக்கு என எந்தப் போலீஸும் இல்லை. அதேபோல, குப்பைக் கிடங்கு நுழைவாயிலிலும் காவலுக்கு என்று யாரும் இல்லை. ஆனால், நுழைவாயில் தெரியும் அளவுக்கு மட்டும்தான் விளக்கு போடப்பட்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தாலும், 10 அடிக்கு மேல் கிடங்கின் உள்ளே செல்வது சிரமமாக இருந்தது. மூக்கைத் துளைக்கும் துர்நாற்றமும் போதிய வெளிச்சமின்மையும்தான் காரணம். ஈ மொய்ப்பதுபோல மொய்த்துக் கடிக்கும் கொசுக்கள், புகை சூழ்ந்த மயான சூழல் என நள்ளிரவை அதிர வைத்துக்கொண்டிருந்தது கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close