Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

30% மக்களின் தாய்மொழி இந்தியை 70% பேர் மீது திணிப்பது நியாயமா?

பல மொழி பேசும் மக்கள் இணைந்து வாழும் நாடு என்பது இந்தியாவின் அடையாளம். உலக மக்களின் பார்வையும் இதுதான். 500 கி.மீ. பயணித்தால் வேற்று மொழியில் பேச வேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் பேசப்பட்டு வந்தன 50 ஆண்டுகளில் 250 மொழிகள் அழிந்தும் போயிருக்கின்றன. இத்தனை மொழிகள் பேசும் மக்கள் நிறைந்த ஒரு நாட்டில், ஒரு மொழியை 'ராஷ்ட்ரிய பாஷை' என்று அறிவிப்பது நியாயமானதா?  

இந்தியாவில் இந்தி ராஷ்ட்ரீய பாஷை

பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, ராஷ்ட்ரீய பாஷையை உருவாக்குவதில் அதிக முனைப்பு காட்டுகிறது. பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற மொழியாக இந்தி இருப்பதால், அதை ராஷ்ட்ரீய மொழி ஆக்கி விட முயல்கிறது மத்திய அரசு. இந்தியை  ராஷ்ட்ரிய மொழியாக்கலாம் என்கிற கருத்தை முதலில் உதிர்த்தவர் தென்னாட்டைச் சேர்ந்த குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளர் வெங்கைய நாயுடு. தொடர்ந்து, பாஸ்போர்ட்டில் இனிமேல் இந்தியும் இடம் பெறும் என அறிவித்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். 

அரபு நாடுகளில் பாஸ்போர்ட்களில் அரபி மொழிதான் உள்ளது ஜெர்மன் நாட்டில், ஜெர்மனி மொழியிலும் ரஷ்யாவில் ரஷ்யன் மொழியிலும் பாஸ்போர்ட்டில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும் சுஷ்மா காரணமும் சொல்கிறார். இந்தியாவில் மாநிலத்துக்கு ஒரு மொழி பேசுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் தாய் மொழி இந்தியும் கிடையாது. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வெறும் 30 சதவிகித மக்களுக்குத்தான் இந்தி தாய் மொழி. 

மொழியை கற்றுக் கொள்பவர்கள் தனிப்பட்ட ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். திணிப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று தமிழகத்தில் பல ஆண்டு காலமாக இந்தி திணிப்புக்கு எதிராகவே போராட்டம் நடந்து வந்தது. இப்போது கர்நாடகாவிலும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் தொடங்கியிருக்கிறதே. பெங்களுரு மெட்ரோ திட்டத்தில், ரயில் நிலையங்களில் மூன்று மொழிகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆங்கிலம், இந்தி, உள்ளுர் மொழியில் எழுதப்பட வேண்டும் என்பது விதி என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையவே, 'எந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மும்மொழிகளில் பெயர்ப்பலகை எழுதினீர்கள் ' என கொதித்தார். பெங்களுருவில் We don't need Hindi in our Metro" ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு, இணையத்தில் வைரலானது. 

இந்தி திணிப்பு

ஏப்ரல் மாதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல மசோதாக்களில் பலவற்றுக்கும் ஒப்புதல் கிடைத்தது. மத்திய அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள், நிச்சயமாக இந்தி படிக்க வேண்டும் என்ற மசோதாவை மட்டும்  குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இப்போதோ,  நாட்டின் உச்சப் பதவியில் உள்ள மூன்று  பேருமே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பின்னணியாகக் கொண்டவர்கள். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவராவார் என்று எதிர்பாரக்கப்படும் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி என மும்மூர்த்திகளும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியிர் அமர்வதும் இதுவே முதன்முறை. '' கிராமத்தைச் சேர்ந்த நான், குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்திருக்கிறேன்; நாட்டில் உள்ள ஒவ்வொரு ராம்நாத் கோவிந்துகளுக்காக உழைக்கப் போகிறேன்'' என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். செயலில் காட்டி விடுவது சிரமமான காரியமே!

நாட்டில் எப்போதுமில்லாத அளவுக்கு மக்கள் ஒருவித வெறுப்புணர்வுடன் இருப்பதாகவே சொல்கிறார்கள். மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு நடவடிக்கை மக்களிடையே வெறுப்பை அதிகரித்திருக்கிறது. அண்மையில் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில்,'' ஒரே மதம், ஒரே மொழி, பாகிஸ்தானி என்பது ஜின்னா கண்ட பாகிஸ்தான். அங்கே அது சாத்தியம். ஏனென்றால் , 98சதவிகித மக்களுக்கு உருது தாய் மொழி, இஸ்லாம் மதம். ஆனால், இங்கே அப்படியில்லை. இங்கே ஆர்.எஸ்.எஸ் கொண்டு வர நினைக்கும் இந்தி, இந்துத்துவா, இந்துஸ்தானி என்கிற கொள்கை மக்களை பிளவுப்படுத்தும் நடவடிககையாகவே அமையும் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில்  மதத்தின் பெயரால் ஏற்கெனவே அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.  இரவில் பட்டினியுடன் உறங்கும் அன்றாடங் காய்ச்சிகள் நிறைந்த  நாட்டில் ,' நாட்டுக்கே ஒரே மொழி தேவை ' என்பதுதான் முதல் பிரச்னையா? மோடி அரசுக்கு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு காலம் பதவி முடிந்து விட்டது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டு காலம் கண் மூடி திறப்பதற்குள்  முடிந்து விடும். இனியாவது மத்திய அரசு, விழித்து கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close