வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (22/07/2017)

கடைசி தொடர்பு:15:27 (22/07/2017)

கமலுக்குப் பயந்து மின்னஞ்சல் முகவரி நீக்கமா?: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

 

அரசு இணையதளப் பக்கத்திலிருந்து மின்னஞ்சல் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை, மக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சி.வி சண்முகம்


தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடப்பதாக நடிகர் கமல்ஹாசன்  குற்றம்சாட்டினார். இதையடுத்து, கமல்ஹாசனிடம் ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் ஊழல் குறித்து மக்களே ஆதாரங்களை அனுப்புவார்கள் எனக்கூறி அமைச்சர்களின் இமெயில் முகவரிகளை வெளியிட்டார். இதனிடையே, ஆதாரங்களை அனுப்புங்கள் என்று கமல் கூறிய உடனே, தமிழக அரசின் இணையதளப் பக்கத்திலிருந்து, மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம், "அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அதேசமயம் இரட்டை இலையை மீட்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழக அமைச்சர்களின் இணையதளப் பக்கத்திலிருந்து, மின்னஞ்சல் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை. மக்கள் தங்களது புகாரை மின்னஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை. வாட்ஸ்அப் மூலமும் மக்கள் புகார் தெரிவிக்கலாம்" என்று கூறினார்.