டி.டி.வி.தினகரனின் ஆகஸ்ட் அதிரடி... உற்சாகத்தில் மன்னார்குடி உறவுகள்! | TTV Dinakaran's August Plan... Mannargudi relations happy

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (22/07/2017)

கடைசி தொடர்பு:13:22 (22/07/2017)

டி.டி.வி.தினகரனின் ஆகஸ்ட் அதிரடி... உற்சாகத்தில் மன்னார்குடி உறவுகள்!

சசிகலா, டி.டி.வி.தினகரன்

தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மன்னார்குடி குடும்ப உறவுகள் முன்னின்று செய்துவருவதால் உற்சாகத்தில் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைவிட அ.தி.மு.க-வில் கோஷ்டி அரசியல் தலைதூக்கியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தலைமையில் அ.தி.மு.க செயல்படத்தொடங்கியது. அப்போது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டவுடன் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. சசிகலாவைப் பிடிக்காத அ.தி.மு.க.வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரண்டனர். இதையடுத்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்தனர். இதனால் அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அணிகள் உருவாகின. 
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையிலும் அ.தி.மு.க-வினர் செயல்பட்டனர். சசிகலாவிடம், அ.தி.மு.க-வை ஒப்படைத்த அவரின் ஆதரவாளர்கள், அடுத்து அவரை முதல்வராக்க முயன்றனர். இந்தச் சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சசிகலா, கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி, முதல்வராகினார். தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள், சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் எதிராக உள்ளன.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் அ.தி.மு.க-வினரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், முதல்வர் ஆதரவு அணி ஒன்றும் அ.தி.மு.க-வில் உருவானது. இது, சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டை திவாகரன் எடுத்தது மன்னார்குடி குடும்ப உறவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 டி.டி.வி.தினகரன்


இதற்கிடையில், இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதும், திவாகரனுக்கு ஆதரவு பெருகியது. ஜாமீனில் வெளியில் வந்த டி.டி.வி.தினகரன், உடனடியாகத் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குறித்தும் பேசப்பட்டது. அதோடு திவாகரனின் செயல்பாடுகள், சிக்கலை ஏற்படுத்துவதால் சமரசமாகச் செல்ல அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு சசிகலாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும் சமரசத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார். இதையடுத்து மன்னார்குடி குடும்ப உறவுகளை அழைத்த பேசிய சசிகலா, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், நாம் பிரிந்திருப்பதால்தான் நமக்கு இந்த நிலைமை என்று சமரசப்படுத்தினார். இந்தச் சமரச பேச்சுக்குப் பிறகு, மன்னார்குடி அதிகார மையங்கள் அமைதியாகின. இரண்டு துருவங்களாகச் செயல்பட்ட அவர்கள் தங்களது மனநிலையை மாற்றிக்கொண்டனர். அதோடு பா.ஜ.க-வுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும் முயன்றுவருகின்றனர்.

தற்போது, சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் சிறையில் மன்னார்குடி உறவுகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று மன்னார்குடி குடும்ப உறவுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது, குடும்பத்தினரிடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதோடு கட்சியிலும் நம்முடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த மன்னார்குடி உறவுகள் ஆலோசனைத் தெரிவித்துள்ளது. இதனால், மன்னார்குடி உறவுகள் பகையை மறந்து ஒற்றுமையாகச் செயல்பட முடிவெடுத்துள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம்

இதையடுத்து, கட்சியில் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட, டி.டி.வி.தினகரன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு உறுதுணையாக திவாகரனும் செயல்பட கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இந்த சுற்றுப்பயணத்தை டி.டி.வி.தினகரன் தொடங்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுப்பயணத்துக்கு மன்னார்குடி குடும்ப உறவுகள் ஒற்றுமையாக ஏற்பாடு செய்வதால் இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் கைகுலுக்கிக் கொண்டு வேலைகளைத் தொடங்கவுள்ளனர்.

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னம் வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை டெல்லி போலீஸாரால் நிரூபிக்க முடியவில்லை. போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்கூட டி.டி.வி.தினகரன் பெயரில்லை. டி.டி.வி.தினகரன் சிறைக்கு சென்றபிறகு அ.தி.மு.க.வில் அதிகார மையங்கள் அதிகரித்துவிட்டன. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன், கட்சிப் பணியில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார். பா.ஜ.க.வின் தயவைப் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டி செயல்பட்டுவருகின்றனர். டி.டி.வி.தினகரனின் ஆதரவு பட்டியலில் 37 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதைவைத்து அ.தி.மு.க. ஆட்சியைக்கூட எங்களால் கலைக்க முடியும். ஆனால், அதை நாங்கள் செய்யவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க-வை அழிக்க நாங்கள் விரும்பவில்லை.

ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவே டி.டி.வி.தினகரன் விரும்புகிறார். இதற்காகத்தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். மதுரையிலிருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் இந்தச் சுற்றுப்பயணம், அ.தி.மு.க-வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தொண்டர்களை உற்சாகப்படுத்தும்" என்றனர். 

திவாகரன்

திவாகரன் தரப்பில் பேசியவர்கள், "டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகின்றன. சசிகலாவைச் சந்தித்தப்பிறகே அதுதொடர்பான முடிவெடுக்கப்படும். நாங்களும் பிளவுபட்ட அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அணிகளாகச் செயல்படுவதால் கட்சியை வளர்க்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவால் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை அ.தி.மு.க-வினர் ஒற்றுமையாகச் சந்தித்தால் மட்டுமே ஓட்டுக்கள் சிதறாமல் வெற்றி பெற முடியும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு நல்லதொரு முடிவை எடுப்போம்" என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஜெயலலிதாவின் ஆசியோடு அவர் விரும்பிய ஆட்சி, தமிழகத்தில் சிறப்பாக நடந்துவருகிறது. எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஒரு குடும்பத்தின்பிடியில் அ.தி.மு.க. செயல்படுவதைத் தொண்டர்கள் விரும்பவில்லை. மேலும், அ.தி.மு.க-வில் மற்ற கட்சிகளைப்போல கோஷ்டி அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எப்போதும் கட்சியில் அனுமதித்ததில்லை. அதன்படி செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க முடியும்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்