வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (22/07/2017)

கடைசி தொடர்பு:13:08 (22/07/2017)

கொடிக்கம்பத்தைக் குப்பையில் வீசிய போலீஸ் - வெகுண்டு எழுந்த வி.சி.க!

நெல்லை மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கொடிக்கம்பத்தை அகற்றி அதை போலீஸார் குப்பையில் வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியினர் திரண்டதால், மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல்நிலையத்தின் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வைக்க அக்கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் நேற்று மாலை முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஜெயராஜ், அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் அவரிடம், ‘கடந்த 10 வருடமாக இதே இடத்தில் எங்கள் கொடிக்கம்பம் இருந்தது. கடந்த தேர்தலுக்காக அகற்றப்பட்ட கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் வைக்கிறோம்’ எனத் தெரிவித்தனர். 

ஆனால், அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என்பதில் இன்ஸ்பெக்டர் விடாப்பிடியாக இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், கொடிக்கம்பத்தை அகற்றியதுடன் அதைத் தூக்கி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அத்துடன், ஒன்றிய நிர்வாகிகள் 5 பேரை காவல்நிலையத்தில் உட்கார வைத்து விசாரித்து உள்ளார். இந்தச் சம்பவம் கட்சியினரைக் கொந்தளிக்க வைத்து இருக்கிறது.

இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர், இரு தரப்பினரும் பேச்சுவாரத்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து காவல்துறையினரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்த ஒன்றிய நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பத்தை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் நெல்லை தெற்கு மாவட்ட அமைப்பாளரான தமிழன் ஷேக் நம்மிடம் பேசுகையில், ‘’திசையன்விளையில் அந்த இடத்தில் கடந்த 10 வருடமாக எங்கள் கட்சியின் கொடிக்கம்பம் இருந்து வருகிறது. கடந்த தேர்தலின்போது அனைத்துக் கொடிக்கம்பங்களையும் அகற்றியபோது நாங்களும் அகற்றினோம். அதன்பின்னர், எங்கள் கட்சியின் தலைவர் வரும்போது கொடியேற்றத் திட்டமிட்டிருந்தோம்.

இந்த நிலையில் 23-ம் தேதி தலைவர் இந்தப் பகுதிக்கு வரவிருக்கிறார். அப்போது கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சி இருந்ததால் அந்தக் கொடிக்கம்பத்தை வர்ணம்தீட்டி மீண்டும் அதே இடத்தில் வைக்கத் திட்டமிட்டு பணிகள் நடந்தன. எங்கள் ஒன்றியச் செயலாளர் ராஜன் அந்தப் பணியை மேற்கொண்டபோது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், அவரை ஒருமையில் திட்டியதுடன் கொடிக்கம்பத்தைப் பிடுங்கி குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார். அத்துடன் 5 பேரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். 

இது பற்றிக் கேள்விப்பட்டதும் நானும் எங்களுடைய மாவட்டச் செயலாளர் சுந்தர், மாநில துணைச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் காவல்நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசினோம். அப்போதுகூட அவர் எங்களிடம், ‘சாதிக் கட்சி’ என்று பேசினார். நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தோம். கட்சிக் கொடி அந்த இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுத்ததால் மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பத்தை வைக்க அனுமதித்தார். இருப்பினும் இன்ஸ்பெக்டர் சாதிய உணர்வுடன் நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது’’ என்றார்.

மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டதால், இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததில் அப்பகுதி மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.