திருப்பூரில் துவங்கிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோரின் நிகழ்ச்சி திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மலர்களைத் தூவி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்கள். பின்னர், திடலில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ,  தளவாய் சுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் புகைப்படங்களைக் கண்டு ரசித்தனர். பின்னர், விழா அரங்கில் வைக்கப்பட்டு இருந்த எல்.ஈ.டி திரைகளில் எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம், அரசியல் பிரவேசம், ஆட்சியில் ஆளுமை என அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய காணொளிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்டம் முழுவதும் இருந்து அழைத்து வரப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவங்கி நடத்தப்பட்டது.


மேடையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் அனைவரும் என்றுமே தங்களின் முயற்சியை கைவிட்டுவிடக் கூடாது. என்றைக்கு நாம் முயற்சி செய்வதை கை விடுகிறோமோ அன்று நாம் பின்னடைவை சந்திக்க துவங்குகிறோம் என்று அர்த்தம். எனவே, மாணவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சிகள் செய்து பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன். தமிழக அரசு துறைகளுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு முன்மாதிரியாக தொடர்ந்து செயல்படும் என்றார்.
பின்னர் பேசிய மக்களவைத் துணை.சபாநாயகர் மு.தம்பிதுரை, உறுதியான போராட்ட குணம்கொண்ட எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். நாட்டின் எதிர்காலத்தை நல்லவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவே இன்று மாணவர்களை இந்நிகழ்ச்சியின் விருந்தினர்களாக அழைத்து வந்திருக்கிறோம்'' என்றார்.

மதியத்துக்கு மேல் நடைபெறும் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் அடங்கிய இசைக் கச்சேரி நடத்தப்படுகிறது. மாலை 5 மணிக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!