திருச்சி வானொலி தமிழ்ச் செய்திப் பிரிவை மூடுவதா? - சி.பி.ஐ. கட்சி கண்டனம்

                                                                                                                                 
இந்தித் திணிப்புக்கான முயற்சியில் அகில இந்திய வானொலியின் திருச்சி மண்டலச் செய்திப் பிரிவை மூடுவதை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

முத்தரசன்

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக அகில இந்திய வானொலியின் திருச்சி மண்டல செய்திப் பிரிவு மூடப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 36 ஆண்டுகளாக திருச்சி மண்டலச் செய்திப்பிரிவின் மூலம் விவசாயிகள், சிறு தொழில் நடத்துவோர், மீனவர்கள், கடலோரப் பகுதியில் வாழ்வோர் பயனடைந்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இணைய வலைத் தொடர்பு விரிவடைந்து வருகிறது. எனினும், பெரும்பகுதி மக்கள் வானொலி சேவையால் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு திருச்சி மண்டல செய்திப்பிரிவை மூட முடிவு செய்திருப்பது தமிழ்வழி சேவையைத் தடுத்து, இந்திமொழி சேவையைத் திணிப்பதாகவே அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார். 

மேலும், ”இதன் மூலம் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர்கள் வேலை இழப்புக்கு ஆளாகிறார்கள். எனவே, அகில இந்திய வானொலியின் திருச்சி மண்டலச் செய்திபிரிவை மூடும் திட்டத்தை கைவிட்டு, அதைத் தொடர்ந்து மேம்பட்ட முறையில் செயல்பட மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் முத்தரசன் கூறியுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!