வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (22/07/2017)

கடைசி தொடர்பு:17:57 (22/07/2017)

சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, ஆசிரியர்களுக்குப் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

மிழகத்தில் சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிகளிலும் முறையான சீர்திருத்தப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பள்ளிக்குழந்தைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட  பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்கு ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”பள்ளிக்குழந்தைகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுப்பது எப்படி, ஒரு சிறுவன் பாதை மாறிச் செல்வதைக் கண்டுபிடிப்பது எப்படி போன்ற பயிற்சிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்க இருப்பதாகவும், ஆர்வமுள்ளவர்களின் பட்டியலை முதல்கட்டமாக அனுப்ப வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, மாவட்டப் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களிலிருந்து அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை

10 நிமிடம் தாமதாகப் பள்ளிக்கு வந்தாலே பெற்றோர்களுக்கு போன் செய்து உரிய காரணத்தைக் கேட்கும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் தான்,  10 நாள்கள் ஆனாலும், பள்ளிக்கு வராத மாணவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் அரசுப்பள்ளியும் இருக்கிறது. இன்றைய சூழலில் மதுவும் போதை வஸ்துகளும் மாணவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளன. போதைப் பொருள்களைத் தடை செய்யும் அரசு, அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைத் தடை செய்ய மறுப்பது ஏன்? அடிப்படை கட்டமைப்புகளில் சீர்திருத்தம் செய்யாமல், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதே கசப்பான உண்மை. தமிழகத்தில் சிறார்கள் குற்றச்சம்பவங்களில் அதிகம் ஈடுபடுவதை அரசு ஒப்புக்கொள்வதைப்போல உள்ளது இந்தச் சுற்றறிக்கை. மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒரு வகையில் ஏற்புடையதாக இருந்தாலும், அவை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. இருந்தபோதும், இது வரவேற்கத்தக்க முயற்சியே!