ஆடி அமாவாசை தரிசனம்... சகல நன்மைகளும் அருள்வார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம். | Sathuragiri sundara mahalingam temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (22/07/2017)

கடைசி தொடர்பு:20:29 (22/07/2017)

ஆடி அமாவாசை தரிசனம்... சகல நன்மைகளும் அருள்வார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மலைகளுக்கிடையில் அமைந்துள்ள சதுரகிரியில், சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில், அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட தலமாகும். இங்கு நடைபெறும் ஆடி அமாவாசைத் திருவிழா மிகச் சிறப்புவாய்ந்த ஒன்று.  கரடுமுரடான பாதையில்தான்  செல்லவேண்டும் என்றாலும் இங்கு ஒருமுறையாவது சென்று பூஜை செய்வதை பெரும் புண்ணியமாக பக்தர்கள்  கருதுகிறார்கள்.  மதுரை, விருதுநகர் என இரண்டு மாவட்டங்களிலிருந்தும் சதுரகிரி மலைக்குச் செல்ல பாதைகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பக்தர்கள் திரளாக வருகிறார்கள். அதே நேரம் வனத்துறையின் முழுக்கட்டுபாட்டிலுள்ள இம்மலையில் முக்கிய நாள்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சதுரகிரி

அதனால், தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏகப்பட்ட விதிகளையும், கட்டுப்பாடுகளையும் இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் விதித்துள்ளன. இந்த வருடத்துக்கான திருவிழா 20 - ம் தேதி தொடங்கியது. வருகிற 25 - ம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெறுகிற இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துவண்ணம் உள்ளார்கள்.

ஶ்ரீ சுந்தர மகாலிங்கம்

 

விழா துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்கள்  மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் பேரையூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.  

விழாவைச் சிறப்பாக நடத்தவேண்டும், பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், மலைக்கு வருகிற  பக்தர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி விவாதித்தனர்.  இதைத் தொடர்ந்து  அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.  ஆடி அமாவாசை திருவிழாவில்  பிரதோஷ சிறப்பு பூஜை, சிவராத்திரி சிறப்பு பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றன. நாளை  சிறப்பு அலங்காரம், 23 - ம் தேதி  18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. 

பேரையூர் வழியாக தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். மலைக்குச் செல்வோர் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வரக்கூடாது. தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் குடிநீர்த் தேவைக்கு பிளாஸ்டிக் கேன்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள்,  தீப்பெட்டி, எரிபொருள்கள் கொண்டுசெல்லக்கூடாது. மலையில் சுற்றித்திரியும்  விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. மலையிலுள்ள அரியவகை மூலிகைகளைப் பறிக்கக்கூடாது என்று பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை  சரியாகப் பின்பற்றுகிறார்களா  என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். 

ஶ்ரீ சுந்தரமூர்த்தி சந்நிடி

அமாவாசை நாளன்று  கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மதுரை,விருதுநகர்  மாவட்டங்களிலுள்ள  பல  ஊர்களிலிருந்தும்  ஏகப்பட்ட சிறப்புப் பேருந்துகள்  தாணிப்பாறை வரை இயக்கப்பட்டு வருகிறது. கோவில் அமைந்துள்ள பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரத்திலிருந்து, மலைக்கோவில் வரை முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்சுகள்  தயார் நிலையில் உள்ளன.

நாளை காலை தானிப்பாறையில் தமிழக அரசின் புகைப்படக் கண்காட்சியை மதுரை  மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மலைகோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் பார்வையிடுகிறார். குறைகள்  ஏதேனும் இருந்தால் அவரிடம் தெரிவிக்கலாம்.

செ.சல்மான்.
படம் : ஆர்.எம்.முத்துராஜ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்