பாலியல் குற்றச்சாட்டில் கேரள எம்.எல்.ஏ கைது!

பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ இன்று கைது செய்யப்பட்டார்.

 

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வின்சென்ட். முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்வான இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், உயிருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார். இதனால் பயம் அடைந்த அந்தப் பெண், 19-ம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வின்சென்டிடம் இன்று மதியம் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் பின்னர், போலீஸார் அதிகாரபூர்வமாக வின்சென்ட் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். அவரை ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாலியால் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து வின்சென்ட் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதாலா இதனை நிராகரித்து உள்ளார்.

கைது செய்யப்பட்ட வின்சென்ட், 'என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த விவகாரத்தில் தவறாகச் சேர்த்துள்ளனர். நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்' என்றார்.

இதனிடையே, வின்சென்ட்டை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!