Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் பரவும் காய்ச்சல்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

காய்ச்சல் உருவாக்க்கும் கொசுக்களின் பிறப்பிடம்

க்கத்து மாநிலமான கேரளாவில் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது டெங்கு. தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், வட மாவட்ட உட்பகுதிகள் வரையில் எட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு காய்ச்சல். இதுவரையில் இந்தக் காய்ச்சலுக்குப் பெயர் எதுவும் இல்லை. அரசின் சுகாதாரத் துறை விரைந்து செயல்பட்டு, பெயர் இல்லாத  இந்தக் காய்ச்சலில் இருந்து மக்களைக் காப்பாற்றினால் அதுவே போதும். இந்தக் காய்ச்சலைத்தான் மக்களும், நடிகர் கமல்ஹாசனும் டெங்கு என்கிறார்கள். சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும்  கடந்த ஆண்டைப்போலவே டெங்கு பரவி வருகிறது. தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 13-ம் தேதியும், அதன் தொடர்ச்சியாக 18-ம் தேதியும் டி.எம்.எஸ். வளாகக் கூட்டரங்கில் என் தலைமையில் நடைபெற்றது" என்று  கூறியுள்ளார்.

கொசு மருந்து, புகை மருந்து அடித்தல், காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து விற்பதைத் தடுத்து போலி மருத்துவர்கள்மீது நடவடிக்கை போன்றவைகளும் மந்திரி விஜயபாஸ்கரின் 'டெங்கு ஒழிப்பு' நடவடிக்கை குறித்த அறிக்கையில் இருக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொன்னேரி - திருவள்ளூர் பகுதிகளில் இதேபோன்று  காய்ச்சல் வேகமாகப் பரவியது. மீஞ்சூரைச் சேர்ந்த ஒரு சிறுமிதான், 'திருவள்ளூர் மாவட்ட டெங்குவுக்கு முதல் பலியானவர். திருவள்ளூர் மாவட்ட திருத்தணியில் தொடங்கி காவேரிராஜபுரம், பள்ளிப்பட்டு, ஆர்.கேபேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, அம்மையார்குப்பம், கொடிவலசா, கி.நெடுகல், கோணசமுத்திரம், நொச்சிலி, வி.கே.ஆர். புரம், கே.ஜி.கண்டிகை, திருவாலங்காடு, மத்தூர், பொன்பாடி, நல்லாத்தூர்,  அருங்குளம், நாவலூர், ஆற்காடு குப்பம், செக்கலூர், மணவூர், சின்னம்மா பேட்டை என்று முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அப்போது  காய்ச்சல் பரவியது. மருத்துவச் சிகிச்சை பலனின்றி பலர் இறந்த நிலையிலும், 'மர்மக்காய்ச்சல் என்றோ, டெங்கு என்றோ  ஊடகங்களில் செய்தி வெளியிடக் கூடாது' என்பதில்தான் சுகாதாரத் துறை அப்போது கவனமாக இருந்தது.  பாதிக்கப்பட்டவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசுப் பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஒரே நாளில் மட்டும் 1,100 பேர்  திருத்தணி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த  8 பேர் அடுத்தடுத்து இறந்தும்போயினர்.
அதே காய்ச்சல் சரியாக 11 மாத இடைவெளியை இப்போது தொட்டிருக்கிறது... கடந்த சில நாள்களாக அதே திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாகப் பரவ,  மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 வயது சிறுமி உள்பட ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காய்ச்சல் குறித்து ஊடகங்களில் வருகிற செய்திகளை 'இந்த முறை'  சுகாதாரத் துறையோ, மந்திரியோ மறுக்கவில்லை. அரசின் சுகாதாரத் துறை பணிகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இந்தப் பெயர் தெரியாத காய்ச்சலில் இருந்து மக்கள் தப்பிப்பது எப்படி என்ற தகவல்களைச் சொல்லிவைப்பது நல்லதுதானே. அந்த வகையில், சில மருத்துவக் குறிப்புகளும், ஆலோசனைகளும் இதோ... காய்ச்சலை விஷக் காய்ச்சல் என்று சொன்னால்தானே வம்பு? அந்தக் காய்ச்சலை உருவாக்கும் கொசுவை விஷக்கொசு என்று சொல்லிவிட்டால் கொசுக்களால் எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை...

விஷக்கொசு அறியலாம்?

நம்மை விஷக் கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வாந்தி, களைப்பு, இருமல், தொண்டைவலி என்று தொடக்கத்தில் மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படும். விஷக்கொசு கடியால் உண்டான காய்ச்சல், நான்காவது நாளிலிருந்து உடலில் பல இடங்களில் வீக்கமாகத் தன்னை வெளிப்படுத்தும். மூட்டுப் பகுதிகளில் வலி அதிகரிக்கும். உடல் முழுவதும் தோலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

டெங்கு : தட்டணுக்கள் தேவை!
டெங்குக் காய்ச்சல் என்றால் பொதுவாக ஏழு நாள்களுக்குள் சரியாகிவிடும். சிலருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருடைய ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்தது ஒன்றரை லட்சமாவது இருக்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு அது ஆயிரம் என்றளவில்கூடக் குறைந்துவிடலாம். எனவே, அவர்களுக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் உயிரிழப்பைத் தடுக்க முடியும். டெங்கு வைரஸ், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை விரைவாக அழித்துவிடுகிறது. தட்டணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியக் காரணமே. அடுத்தகட்டம் இதுதான் பல், ஈறு, மூக்குப் பகுதிகளிலிருந்து ரத்தம் ஒழுகுவது, ரத்தவாந்தி எடுப்பது, மலத்திலும் சிறுநீரிலும் ரத்தம் கலந்துவருவது, எலும்பு மூட்டுகளில் ரத்தம் சேர்ந்து வீங்கிக்கொள்வது போன்ற மோசமான அறிகுறிகள் டெங்கு பலம் பெற்றிருப்பதைக் காட்டும் ஒன்றாகும்.

நிலவேம்புகுடிநீர்

நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருள்கள் கலந்தது நிலவேம்பு குடிநீர். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகக் கிடைக்கிறது. இதை அருந்துவதன் மூலம் டெங்குவின் வேகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.  

வேப்பிலையும், நொச்சி இலையும்!
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவைக் கட்டுப்படுத்த, காஞ்சாங்கோரை அல்லது வேப்பிலையை வீட்டின் முன்புறம், கொல்லைப்புறம் (இருந்தால்), வீட்டு வாசல்களில் தோரணம்போல் தொங்கவிட்டால், அந்த வாசனைக்குக் கொசுக்கள் வராது. காஞ்சாங்கோரை இலை அல்லது நொச்சி இலையை நிழலில் காயவைத்து நெருப்பில்போட்டுப் புகையைப் போட்டாலும் கொசு விரட்டப்பட்டு விடும். ஆடாதொடை இலை மற்றும் வேப்பிலையை வெயிலில் காயவைத்து சமஅளவு எடுத்து பொடியாக்கி அந்தப் பொடியோடு சிறிது சாணத் தூள் சேர்த்து அதில் பச்சரிசிக் கஞ்சியை ஊற்றி ஊதுவத்திபோல் உருட்டிக் காயவைத்து அதைக் கொசுவத்திபோல் பயன்படுத்தினாலும் கொசு வராது.

ஆரஞ்சு, பப்பாளி, அச்சுவெல்லம், சின்ன வெங்காயம் !

ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதர சத்துகளும் காணப்படுகின்றன. செரிமானத்துக்கும், நன்றாகச் சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட ஆரஞ்சு துணை புரியும். பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு பப்பாளி இலைகளை எடுத்துவந்து அதை நன்றாக நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து காலை இரவு வேளைகளில் இரண்டு ஸ்பூன் அளவு இந்த சாறைக் குடித்தாலே டெங்கு, சிறகே இல்லாமல் பறந்துவிடும்.சிட்ரிக் அமிலம் நிறைந்திருப்பதால், எலுமிச்சையும் டெங்குவை விரட்டுவதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆரஞ்சுப் பழம் போன்றே எலுமிச்சையும் செரிமானத்துக்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது. அச்சு வெல்லத்துடன் சிறு (சாம்பார்) வெங்காயம் கலந்து சிறுசிறு இடைவெளியில் ஒருநாளைக்கு ஐந்து முதல் பத்து தடவை என்ற கணக்கில் மூன்றுநாள்கள் சாப்பிட்டாலும் போதும் என்கிறது தமிழ் வைத்தியக் குறிப்பு. ரத்தத்தில் சிவப்பு அணுக்களை இது அதிவிரைவில் வேகப்படுத்தி டெங்குவை விரட்டியடிக்கும் மருந்தாகும்.

கொசுக்கள் உற்பத்திக்கு காரணம் !
சுற்றுப் புறத் தூய்மை, தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை சுத்தப் படுத்துதல்,  நீர் தேங்கிய இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல், டயர்கள், தேங்காய் சில்லுகள், அம்மி மற்றும் உரல்களில் நீர் தேங்காமல் வைத்தல், ஈரத்துணிகளை ஒரே இடத்தில் மணிக்கணக்கில் போட்டு வைத்தல்.

கொசு- வியாதி : வரலாறு

டெங்கு காய்ச்சல் குறித்து  முதன்முதலில் சீனப் பேரரசுக் காலத்தில் (265 - 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலை உருவாக்கும் கொசுக்களின் வரலாற்றை ஆய்ந்தும், அரசு சொல்லும் 'நிலவேம்புக் குடிநீர்' மற்றும் பயன்பாட்டில் உள்ள வைத்தியக் குறிப்புகளை மக்களுக்குத் தெரிவித்தும் மட்டுமே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பரவியுள்ள காய்ச்சலை 'ஏதோ ஒரு காய்ச்சல்' என்றே கட்டுரை முழுவதும் சொல்லியிருக்கிறோம். மற்றபடி 'டெங்கு' என்ற காய்ச்சல் வந்தால் என்ன செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளோம். இப்போது பரவியிருக்கும் காய்ச்சலுக்கு அரசு பெயர் வைக்கும்வரை நாம் 'ஏதோ ஒரு காய்ச்சல்' என்றே சொல்வோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close