கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? | Will Ministers answer for these questions

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (23/07/2017)

கடைசி தொடர்பு:14:29 (23/07/2017)

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?

கமல்

'இந்த அரசில் ஊழல் மலிந்திருக்கிறது’' என்று கமல்ஹாசன் சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள்? 

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும் அ.தி.மு.க பிரமுகர்தான். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர் துரைசாமி பெயரிலும், சகோதரி சிந்தாமணி பெயரிலும் மத்திய அரசின் நிதியுதவியால் ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் இரண்டு வீடுகளும், தமிழக அரசின் நிதியுதவியால் செயல்படும் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் ஒரு வீடும் ஆக மூன்றையும் ஒரே குடும்பத்துக்குத் தாரைவார்த்து ‘சூப்பர் பங்களா’ கட்ட உதவியிருக்கிறார். 

இதுபற்றி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகவனிடம் பேசியபோது, ''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மூன்று வீடுகளுக்கான பணத்தை முறைகேடாகப் பெற்று பங்களா கட்டிய துரைசாமி, எனக்குச் சொந்தமான மூன்று அடி இடத்தையும் அபகரித்துவிட்டார். இதுதொடர்பாக எழுந்த பிரச்னையால் நான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றத் தலைவரும், துரைசாமியும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பெற்றேன். இதுமட்டுமல்லாமல் சிதிலமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த ஊழல் புகார் குறித்து விரிவாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தேன். அவர், உடனடியாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து ஆய்வுசெய்தபோது, அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது. அப்போது பணியில் இருந்த குத்தாலம் வட்டார ஊராட்சி அலுவலர், 'வட்டார வளர்ச்சிப் பொறியாளர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர்மீது துறைரீதியிலான நடவடிக்கை' எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார். இனியாவது இதுபோல் ஊழல் நடைபெறாமல் இருந்தால், அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி” என்றார். 

ஊராட்சிச் செயலர் செந்தில்குமாரிடம் பேசியபோது, “எனக்குத் தெரியாமலேயே ஊராட்சி மன்றத் தலைவர் தானாகவே தீர்மானம்போட்டு தன்னுடைய அரசியல் செல்வாக்கால் நேரடியாக பி.டி.ஓ-விடம் கொடுத்து, அனுமதி வாங்கியிருக்கிறார். ஆனால் தற்போது அதிகாரிகளோ, ‘நீ ஏன் அப்போதே இந்தத் தகவலை எங்களிடம் தெரிவிக்கவில்லை’ என்று வருத்தப்படுகிறார்கள். ஒரு தவறும் செய்யாத நான், இந்தப் பிரச்னையில் சிக்கிக்கொண்டு இருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன். 

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பில் இருந்த செல்வராஜிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமை வீடுதான் அது. அதனை, என் சகோதரி சிந்தாமணி பெயருக்கு மாற்றம் செய்துகொடுத்தேன். ஒரு சிறிய தவறுதான். இதைப் போய்ப் பெரிதுபடுத்தி இருக்கிறார்களே... இது நியாயமா” என்ற கேள்வியுடன் முடித்தார். 

மூன்று ஏழைப் பயனாளிகளுக்குப் போய்ச் சேரவேண்டிய வீடுகளைத் தடுத்து, தனது சகோதரி குடும்பம் வாழ வழிவகை செய்த ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரின் செயலுக்குத் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்வார்களா? 


டிரெண்டிங் @ விகடன்