மேடையில் வெடித்த நாற்காலி சண்டை - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பரபரப்பு....!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் நாற்காலியை பிடிக்க தகராறு ஏற்பட்டதால், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

edappadi palanisamy

தமிழக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோர்  விழா திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மலர்களை தூவி நூற்றாண்டு விழாவை துவக்கி வைத்தனர்.

பின்னர் மாவட்டம் முழுவதும் இருந்து அழைத்து வரப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. விழாவின் தொடர்ச்சியாக மாலை 5 மணியளவில் பல்வேறு துறைகளில் கீழ் 21 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சபாநாயகர் மற்றும் முதல்வர் ஆகியோர் விழா அரங்குக்கு வருகை தரும்வரை மற்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையின் கீழ் காத்துக்கொண்டு இருந்தனர். பின்னர் முதல்வரும், சபாநாயகரும் விழா அரங்கை வந்தடைந்து, மேடையை நோக்கி சென்ற பிறகே மற்றவர்கள் மேடைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். விழா மேடையில் முதல்வரும் சபாநாயகரும் அருகருகே அமர்ந்திருக்க, சபாநாயகரின் அருகில் சென்று அமர முற்பட்டார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். அப்போது கோபத்துடன் விரைந்து வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகரை இழுத்து பின்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் போய் அமருமாறு கிளப்பிவிட்டார்.

பதிலுக்கு துணை சபாநாயகரோ " நான் ஏன் போக வேண்டும் என்று எதிர்த்து நிற்க, அடுத்த சில நொடிகளில் இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரித்தது. சுதாரித்துக்கொண்ட முதல்வர் பழனிசாமி, உடனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்க,
அருகில் இருந்த அமைச்சர்கள் தங்கமணியும், செங்கோட்டையனும் சேர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணனை பக்கவாட்டில் இழுத்து அமர வைத்தார்கள். எஸ்.பி வேலுமணியும், தனியரசுவும் பொள்ளாச்சி ஜெயராமனை அமைதிப்படுத்தினர்.


இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நீடித்தது. அதன்பிறகு விழா முன்னிலை உரை வாசித்த உடுமலை ராதாகிருஷ்ணன், கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாக வாசித்து நன்றி தெரிவிக்க, அப்போது பொள்ளாச்சி ஜெயராமனின் பெயரை மட்டும் பாதியிலேயே புறக்கணித்து அடுத்தவர்களின் பெயர்களை வாசித்தார். இதனால் நிகழ்ச்சி முழுவதும் மேடையில் இருக்கமான முகத்துடனேயே காட்சியளித்தார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிகழ்ச்சியின் இறுதியில் கட்சியினர் வீரவாள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் முதல்வரை சூழ்ந்து நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க, அப்போது சத்தமில்லாமல் இறுகிய முகத்துடன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார் துணை சபாநாயகர்.

ஒற்றுமையை நிரூபிக்க வந்த இடத்தில் நாற்காலி தகராறு முற்றிவிட்டது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!