ஆடி அமாவாசை தரிசனம் : ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்!

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை தினமான இன்று ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் புனித நீராடினர்.

ஆடி அமாவாசை

இந்துக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி திதி கொடுப்பது வழக்கம். அதிலும் ஆடி, தை, மாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. இந்த தினங்களில் நாட்டில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வர்.

ராமர் வனவாசம் சென்ற காலத்தில் அவரது தந்தையான தசரத சக்கரவர்த்தி இறந்தார். இதனால் ராமர் தனது தந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய முடியாமல் போனது. இதனால் ஏற்பட்ட தோஷத்தை தீர்க்க அகஸ்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமர் சேது கடலான ராமேஸ்வரம்   கடலில் ராமர் புனித நீராடி தனது தந்தைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டதாக ஐதீகம். இதனால் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதை சிறப்பானதாக கருதுவர்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை சூரிய நாளில் புனர் பூச நட்சத்திரத்தில் வஜ்ர நாம யோகத்துடன் கலந்து வருவதால் இந்த நாளில் செய்யப்படும் திதியினால் மறைந்த முன்னோர்கள் திருப்தியுடன் இருப்பார்கள் எனவும், இதனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்வதுடன் காவிரியிலும் தண்ணீர் பெருகி வந்து விவசாயம் செழிப்படையும் என்பது இன்றைய அமாவாசையின் கூடுதல் சிறப்பு.

இதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த மக்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.  இதனை தொடர்ந்து திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீராமர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார். அதனை தொடர்ந்து தீர்த்தமாடிய மக்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

அமாவாசை தினத்திற்காக மதுரை மற்றும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேரூந்துகளும் இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!