Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழும் கலாம் தேசிய நினைவகம்!

றைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம், ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் வகையிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Abdul Kalam Memorial Hall

நாட்டின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்து, தனது அறிவாலும், ஆற்றலினாலும் அகிலமே வியக்கும்வகையில் பேரும், புகழும் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். தனது சீரிய முயற்சியால் உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியத் திருநாட்டை உயர்த்தியவர். நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியில் இருந்தபோதிலும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மாணவர்களின் எதிர்கால நலன்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது எண்ணம் எல்லாம் வருங்கால இந்தியாவைப் பற்றியும், அதனை உருவாக்கக்கூடிய இளைய சமுதாயத்தினரைப் பற்றியதுமாகவே இருந்தது. இந்த லட்சியத்துக்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்து மறைந்தவர் டாக்டர் கலாம்.

Abdul Kalam Memorial Hall

2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி, மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே கலாமின் உயிர்பிரிந்தது. இந்திய இளைஞர்களின் ஆதர்ச ஆசானாகத் திகழ்ந்த கலாமின் உடல், அவரது சொந்தஊரான ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் ஜூலை 30-ல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நாட்டின் வளர்ச்சிக்காக, ஆராய்ச்சிக் கூடங்களிலேயே செலவிட்டவர் அவர். ஏவுகணை மற்றும் விண்கலம் தயாரிப்பு என விண்வெளி தொடர்பான பல சாதனைகள் டாக்டர் கலாமின் முயற்சியால்  படைக்கப்பட்டன. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், கலாமின் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், அவரின் நினைவிடத்தைக் கட்டி முடித்துள்ளது. 

Abdul Kalam

கலாம் நினைவிடப் பணிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, அவரது பிறந்த நாளில் தொடங்கப்பட்டது. டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தலைமையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 450 தொழிலாளர்கள், பல்வேறு சிரமங்களுக்கு இடையே இரவு, பகலாக தங்கள் உழைப்பைத்செலுத்தி கலாம் நினைவிடத்தை ஒன்பது மாதங்களில் கட்டி முடித்துள்ளனர்.

தமிழக அரசால் முதல் கட்டமாக வழங்கப்பட்ட நான்கு ஏக்கரில் 2.1 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பட்டை வலியுறுத்தும் வகையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல், கலாம் நினைவகப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 50 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த நினைவிடத்தின் நுழைவுவாயிலானது, பிரிட்டிஷார் அமைத்த 'இந்தியா கேட்' போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தரைதளம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட உயர் ரக கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தின் வெளிப்பகுதி முழுவதும் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் கிரானைட் மற்றும் ஆக்ரா சிவப்பு கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதி என்பதால் உப்புக் காற்றினால் நினைவிடம் பாதிக்கப்படாமல் இருக்க, வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதலான கன அளவு கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

Abdul Kalam

நினைவு மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள நான்கு அரங்குகளில் கலாமின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரையப்பட்ட படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை முழுக்கமுழுக்க காய்கறிகள் மற்றும் மூலிகைச் சாறினைக் கொண்டு வரையப்பட்டுள்ளன. கலாமின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரதான கூடத்தின் மேல் ஜனாதிபதி மாளிகையை நினைவுகூரும்வகையில் 12 மீட்டர் உயரத்தில் 9.62 மீட்டர் விட்டம் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மேல் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. நினைவகத்தின் மேற்பரப்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஷெகவாட்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நினைவகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள், கோள்கள், அறிவு மரம், ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பொம்மைகள் வைக்கப்பட்டிருப்பதுடன், ராஜமுந்திரியில் இருந்து கொண்டுவரப்பட்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன. இவற்றுக்கு முத்தாய்ப்பாக கலாமின் வெண்கலச்சிலை அருகே அவரால் கண்டுபிடிக்கப்பட்ட அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கலாம் நினைவிட நுழைவு வாயிலை காரைக்குடி செட்டிநாட்டில் செய்யப்பட்ட மலேசிய தேக்குமரக் கதவுகள் அலங்கரிக்கின்றன.
 

Abdul Kalam

தான் வாழும்போது இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும் அவரின் நினைவிடத்தில், கலாமின் பணிகளைத் தொடரும்வகையில் கோளரங்கம், நூலகம், அறிவுசார் மையம் என பல மைங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காலங்கள் கடந்தாலும் கலாமின் சாதனைகளை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ராமேஸ்வரத்தில் ஜூலை 27-ம் தேதி திறக்கப்படவுள்ள கலாம் தேசிய நினைவகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close