ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம்!

 பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச்சென்றார். இதேபோல, தமிழக அமைச்சர்களான சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, அன்பழகன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், இன்று அதிகாலை செல்லவிருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன்

இந்த இரு அணியினரும், நேற்றிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து, தனித்தனி விமானங்களில் டெல்லி புறப்பட்டனர். தமிழக மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுகுறித்து பிரதமரிடம் பேசுவதற்காக பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சென்றுள்ளனர். தமிழக அமைச்சர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடி மற்றும் சட்ட அமைச்சரைச் சந்தித்து முறையிட உள்ளனர். 

அப்போது நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், " கடந்த வாரம், தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், பிரதமர்,  மத்திய சட்டத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்களைச் சந்தித்து, தேசிய நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையை அழுத்தமாக வலியுறுத்தினோம். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்ட அமைச்சகத்துக்கு வந்துள்ளது. இதற்கடுத்து, மசோதாகுறித்து கூடுதல் விவரங்கள் கோரப்பட்டது. அவை, தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர்களைச் சந்தித்துப்பேச உள்ளோம். தமிழக முதலமைச்சரும் டெல்லிக்கு வரவிருக்கிறார். தமிழக மாணவர்களின் நலன் கருதி, தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டுவருகிறது. தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து  முடிவு எடுக்கப்படும். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறோம்" என்றார்.

இப்படி ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, ஒரே நாளில் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!