வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (24/07/2017)

கடைசி தொடர்பு:12:42 (24/07/2017)

முதல்வர் பழனிசாமிக்கு ஒரு லட்சம் கடிதம்! அதிரவைக்கும் காங்கிரஸ்

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் அமைக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார், காமராஜர், அண்ணா, அம்பேத்கர், எம்ஜிஆர் உட்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது. அதுபோல நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்களின் விருப்பமாகும்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது, சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள், பொதுமக்கள் மூலமாக ஒரு லட்சம் கோரிக்கை கடிதங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் அதன் தலைவர் கே.சந்திரசேகரன் இந்த கோரிக்கை கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கிவைத்தார்.