"என்னை விட்டுட்டு எப்படி சைக்கிள் வழங்கலாம்?" - கடுகடு செந்தில்பாலாஜி!

 சைக்கிள்

ரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் இந்நாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே எதற்கெடுத்தாலும் பிரச்னை வெடிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 3 ஆண்டுகள் ஆகியும், 'யார் சொல்கிற இடத்தில் அமைப்பது' என்ற இருவரது பிடிவாதத்தால், இன்னும் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் மாணவர்களுக்கு விலையில்லாத மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கி முடிக்க, "என் தொகுதியான அரவக்குறிச்சியில் உள்ள பதினாறு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் உரிய மிதிவண்டிகள் வந்துசேர்ந்துவிட்டன. ஆனாலும், என்மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் அமைச்சர், கடந்த 2 வருடங்களாக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்காமல் இழுத்தடிக்கிறார். மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜூம் இதற்குத் துணை போகிறார்" என்று 2 வாரங்களுக்கு முன்பு அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது அதிரடி குற்றச்சாட்டை முன் வைத்தார் செந்தில்பாலாஜி. அதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், "நானும் கலெக்டரும் அவர் தொகுதியில், மிதிவண்டிகள் வழங்கத் தயாராகவே இருக்கிறோம். அவர்தான் தேதி தராமல் இழுத்தடித்து, ஏதோ நான்தான் மிதிவண்டிகள் தராமல் தடுப்பதாக மக்கள் மத்தியில் என் பெயரைக் கெட்ட பெயராக்க முயல்கிறார்" என்று விளக்கம் கொடுத்தார். இதுபற்றி நாம் அப்போதே விகடன் இணையதளத்தில் செய்தி பதிந்திருந்தோம். 

 விஜயபாஸ்கர்இப்போது மீண்டும் அதே மிதிவண்டி விவகாரத்தை வைத்து இருவரும் முஷ்டி முறுக்கி இருக்கிறார்கள். 'செந்தில்பாலாஜிதான் அவர் தொகுதியில், மிதிவண்டி வழங்கவிடாமல் செய்கிறார்' என்று குற்றம்சாட்டி வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், திடுதிப்பென்று அரவக்குறிச்சி தொகுதியில், மிதிவண்டிகள் வழங்க இருப்பதாக அறிவித்தார். அவரது தரப்பில் செந்தில்பாலாஜிக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜோடு அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத மிதிவண்டிகளை வழங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு வராத செந்தில்பாலாஜி, புகழூருக்கு அருகில் உள்ள தோட்டக்குறிச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, "எனது தொகுதியான அரவக்குறிச்சியில் இலவச மிதிவண்டிகள் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனால், எனக்கு அழைப்பு இல்லை. மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டபோது உரிய பதில் இல்லை. எனது சட்டமன்ற தொகுதியில் என்னை அழைக்காமல் என்ன விழா? தொகுதி எம்எல்ஏ-வான எனக்கு என்ன மரியாதை? 

 செந்தில் பாலாஜி"கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. காவல்துறை ஆதரவுடன், இங்குள்ள முக்கியப் புள்ளியே இந்த மதுவிற்பனைக்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்" என்று அமைச்சரை மறைமுகமாக வறுத்தெடுத்தார். 

ஆனால், இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்னும் சில பள்ளிகளில் மிதிவண்டிகளை வழங்கிவிட்டு, அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் உள்ள 17 அரசு பள்ளிகளிலும் மிதிவண்டிகளை வழங்க உத்தரவிட்டார். அதோடு, நிருபர்களை சந்தித்த அவர்,
 "அரவக்குறிச்சி தொகுதியில் விலையில்லாத மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொகுதி எம்எல்ஏ என்ற வகையில் செந்தில்பாலாஜியை அழைக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளது. அவர் ஒத்துழைப்பு தராததால், நாங்களே மிதிவண்டிகளை வழங்கும்படி ஆகிவிட்டது. ஏற்கெனவே இதுபோல், 4 முறை மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடத்த அவரை மாவட்ட நிர்வாகம் அழைத்தும், தகுந்த ரெஸ்பான்ஸ் செய்யவில்லை அவர். அதனால், ஏற்கெனவே 4 முறை இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தள்ளிப்போனது. அதனால், நாங்களே நிகழ்ச்சியை நடத்த வேண்டியதாயிற்று. எங்கள் தரப்பிலும் பேசிப் பார்த்தோம். 'இரண்டு நாள்கள் கழித்து வருகிறேன்'னு விழாவைத் தட்டிக் கழிக்கப் பார்த்தார். அதனால், அவர் விழாவை நடத்த விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டோம். இதனால், மக்களிடம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறதே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதால், அரவக்குறிச்சி தொகுதியில், இலவச மிதிவண்டிகளை வழங்கி முடித்தோம்" என்றார்.

 அரசியல் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!