Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் களைகட்டும் ஜூலை புத்தகக்காட்சி! திரளும் வாசகர்கள்

சென்னை ஜூலை புத்தகக்காட்சி

ல்வியாண்டுத் தொடக்கத்தில் நடக்கும் ஜூலை 2017 சென்னைப் புத்தகக்காட்சியானது, மூன்றாவது ஆண்டிலும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. 

கடந்த 21-ம் தேதியன்று நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்த இந்தப் புத்தகக்காட்சியில், வழக்கமான நெரிசலும் சிரமும் இல்லை. ஆண்டின் இரண்டாவது புத்தகக்காட்சி என்றாலும் வாசகர்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு புத்தகங்களைப் பார்வையிடவும் வாங்கிச்செல்லவும் முடிகிறது. 

மீனுக்கு ஈடு இணை உண்டா?

சென்னை ஜூலை புத்தகக்காட்சி அமைச்சர் ஜெயக்குமார் திறப்பு

தொடக்கநாளான ஜூலை 21 காலை 10 மணிக்கு நிதியமைச்சர் ஜெயக்குமாரும் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் புத்தகக் காட்சியைத் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் மீதான நடிகர் கமல்ஹாசனின் விமர்சனத்தால் அமைச்சர்கள் பலரும் அவர் மீது கடுமையான வார்த்தைகளால் பதில் கூறியிருந்தனர். அதையடுத்து கமலின் அண்ணன் சாருஹாசனும் பதிலுக்கு, ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டது குறித்து குறிப்பிட்டிருந்தார். அந்தப் பரபரப்பில் அமைச்சர்கள் இருவரிடமிருந்தும் பதிலை வாங்க அதிக எதிர்பார்ப்புடன் செய்தியாளர்கள் திரண்டிருந்தனர். பத்து மணிக்கு முன்பே புத்தகக்காட்சி மைதானத்தில் குவிந்த செய்தியாளர்கள், அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், ஒரு மணி நேரம், ஒன்றரை மணிநேரம் எனக் காத்திருந்து நொந்துபோனார்கள். ஒருவழியாக முற்பகல் 11.45 மணியளவில் நிதியமைச்சர் ஜெயக்குமார் புத்தகக்காட்சியைத் திறந்துவைத்தார். 

முதல் வரிசையில் ஒவ்வோர் அரங்காகப் பார்வையிட்டுவந்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா தொடர்பான- ஒரு டஜன் புத்தகங்களை வாங்கினார். பின்னர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ‘எம்.ஜி.ஆர் 100’ எனும் அரங்குக்குள் சென்றவர், அங்குள்ள புகைப்படக்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தபடி நகர்ந்தார். 
முன்னாள் முதலமைச்சர்களின் புத்தகங்களைத் தவிர, சில சித்த மருத்துவ, உணவுப் புத்தகங்களையும் அவர் ஆர்வமுடன் பார்த்து வாங்கினார். அப்போது, வாசகர் ஒருவர் அவரிடம், “உணவுப் புத்தகத்தில் மீன் உணவு உண்டா? எனக் கேட்க, ‘”மீன் இல்லாமல் உணவு இருக்குமா, இங்கே பாருங்க, நான் எவ்வளவு பலமா இருக்கேன்... எல்லாம் மீன்தான்...” என புஷ்டியைக் காட்டினார். 

உடன்வந்த மூத்த பதிப்பாளர்களிடம் குறிப்பிட்ட சில புத்தகங்கள் இருக்கின்றனவா எனக் கேட்டார். சில ஆலோசனைகளையும் அவர் சொன்னார். கடைசியாக கமலின் விமர்சனத்துக்குப் பதில் சொல்லாமல் அவரைச் செய்தியாளர்கள் விடவில்லை. 

வாசகர்களைக் கவரும் பத்து ஓவியங்கள்:

சென்னை ஜூலை புத்தகக்காட்சி

முன்னதாக கடந்த 18-ம் தேதியன்று மூத்த ஓவியர் விஸ்வம் தலைமையில், ஆணியாய் அறையப்படும் கல்வியை விதைகளாய்த் தூவுவது எப்படி என்னும் பொருளில், ஓவியங்கள் வரையப்பட்டன. ஓவியர்கள் ஜேகே என்ற ஜெயக்குமார், மனோகரன், அமல் மோகன், மணிவண்ணன், மூக்கையா, கார்த்திகேயன், ஹனிபா, சரவணன், அருணகிரி, குமரகுருபரன், டேவிட் ஆகியோர் வரைந்த இந்த ஓவியங்கள், புத்தகவிழா அரங்குக்குள் நுழைந்தவுடன் வைக்கப்பட்டுள்ளது. கலைரசிகர்களும் வாசகர்களும் இந்த ஓவியங்களைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். அந்த ஓவியங்களின் முன்பாக நின்று ‘கடமை’ உணர்ச்சியோடு செல்ஃபி எடுத்தபடியும் இருக்கின்றனர். 

சென்னை ஜூலை புத்தகக்காட்சி

இத்துடன் ’காடு’ சுற்றுச்சூழல் இதழின் சார்பில் வைக்கப்பட்டுள்ள, இயற்கை, காட்டுயிர்ப் புகைப்படங்களும் சூழல் ஆர்வலர்களின் அதிவிருப்பமாகக் காணப்படுகின்றன.

சென்னை ஜூலை புத்தகக்காட்சி

காரல்மார்க்ஸ் பிறந்த 200 வது ஆண்டை முன்னிட்டு, லெஃப்ட் வேர்ட் பதிப்பகம் சார்பில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் இதைத் திறந்துவைத்தனர். மார்க்சியம் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கென உள்ள தனி வாசகர்கள் புத்தகங்களைப் புரட்டிப்புரட்டி படித்த பின்னர் வாங்கிச்செல்வதைப் பார்க்கமுடிகிறது.  

புத்தக விற்பனைக்காட்சி மட்டுமல்லாமல், வாசிப்பை நேசிக்கவைக்கும் நிகழ்ச்சிகளும் அன்றாடம் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த ஞாயிறன்று எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் தலைமையில் சுட்டி விகடன் பொறுப்பாசிரியர் கே.கணேசன் உள்பட பல குழந்தைகள் இதழ்களின் பொறுப்பாசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. 

இன்று மாலை எடிட்டர் பி.லெனின் தலைமையில் 'தமிழ் சினிமா 100’ நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில் இயக்குநர் ஞானராஜசேகரன், இயக்குநரும் பேராசிரியருமான வெங்கடேஷ் சக்ரவர்த்தி, இயக்குநர் சீனு ராமசாமி, திரை இயக்குநரும் கலைஞருமான ரோகிணி, தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன், கவிஞர் இரா.தெ.முத்து ஆகியோர் பங்கேற்கின்றனர். 

ஜனவரி புத்தகக்காட்சியில் நிலவும் திருவிழா நெரிசல், இந்தப் புத்தக விழாவில் இல்லை. இது, புத்தகக் காதலர்கள் தங்கள் விரும்பும் புத்தகங்களைப் படித்துப்பார்த்து தேர்வுசெய்வதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close