வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (24/07/2017)

கடைசி தொடர்பு:18:20 (24/07/2017)

"சினிமாக்காரர்கள் உதவியிருக்கக் கூடாதா?" - அஃக் பரந்தாமன் குறித்து கலாப்ரியா வேதனை!

தமிழ் சிறு பத்திரிகை உலகின் முன்னோடிகளில் ஒருவரான பரந்தாமன் கடந்த சனிக்கிழமை காலமானார். 'அஃக்' என்கிற இலக்கிய இதழை நடத்தி வந்த அவர் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து இலக்கியவாதிகளுடன் நெருக்கமானவர். நேர்த்தியான வடிமைப்புகொண்ட இதழை தயாரித்தற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றவர். சேலத்தில் அச்சகம் நடத்தி வந்த அவர் சினிமா ஆசையில் வாழைத்தோட்டத்தை விற்று விட்டு சென்னை வந்தார். கனவுத்தொழிற்சாலைக்கு கிளம்பி வந்து வீழ்ந்து போன கோடிக்கணக்கானவர்களில் ஒருவராகிப் போனார். கடைசியாக இவர் குறித்த செய்தி விகடனில் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. அப்போது இவர் ஒரு முதியோர் இல்லத்தில் நினைவுகள் குலைந்து போய் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த கட்டுரையை படித்துவிட்டு அவருக்கு உதவி செய்யவும் நிறைய பேர் முன்வந்தனர். ஆனால் அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் கனவுகளை பதியம் செய்து வளர்த்தெடுக்க அலைந்த காலங்களில் அவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மையும் கூட.   

அஃக் பரந்தாமன்

அவரின் மறைவு குறித்து தமிழின் முக்கியமான கவிஞர் கலாப்பிரியா அவர்களிடம் பேசிய போது...

"அஃக் பரந்தாமனின் சொந்த ஊர் சேலம் ஜாகிர் அம்மாபாளையம். அவர்கள் அம்மா ஒரு மில்லில் வேலை செய்தார். அம்மாவுக்கு ரொம்பவே செல்லப்பிள்ளைதான் பரந்தாமன்.  சேலத்தில் இருந்து நடை என்கிற இலக்கிய பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. சி.மணி நடத்தினார். அதற்குப் பிறகு கசடதபற, வானம்பாடி உள்ளிட்ட இதழ் 70களில் வெளிவரத் தொடங்கின.  'கண்ணதாசன்' 'தீபம்' 'தாமரை' 'வானம்பாடி' இதழ்களில் எழுதிய  பரந்தாமன் வானம்பாடிக் கவிஞராகத்தான் இருந்தார். அதாவது ரொமான்டிக் கவிதைகளைத்தான் எழுதினார். அதே போல் ஓவியத்திலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. லினோ கட் வடிவ ஓவியங்கள் சிறப்பாக செய்வார். அப்போது வந்த இலக்கிய பத்திரிகைகளில் ஓவியங்களுக்குப் பெரிய இடம் இல்லை என்று கருதிய பரந்தாமன் 1972ம் ஆண்டு 'அஃக்' இதழைக் கொண்டு வந்தார். அப்போது எழுதிக்கொண்டிருந்த அனைவருக்கும் கடிதம் போட்டுப் படைப்புகளை வாங்கினார். படைப்புகள் கேட்டு அவர் அனுப்பும் கடிதமே அவ்வளவு கலாபூர்வமாகக் கவரக்கூடிய வகையில் இருக்கும்.

கிட்டதட்ட அன்றைய காலகட்டத்தில் அனைவரின் படைப்புகளையும் வாங்கி வெளியிட்டார் என்றே சொல்லலாம். வெங்கட் சுவாமிநாதன், பிரமிள் போன்றவர்களின் முக்கிய பங்களிப்பு அதில் இருந்தது. அதே போல் 'அஃக்' இதழில் பரந்தாமன் செய்த முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆறேழு வருடங்களாக எழுதாமல் ஒதுங்கி இருந்த சுந்தர ராமசாமியை மறுபடி எழுதச்செய்ததுதான். 'பசுவய்யா' என்கிற புனைப்பெயரில் சுந்தர ராமசாமி கவிதை எழுதத்துவங்கியதே பரந்தாமனின் அஃக் இதழில்தான். முதல் மூன்று கவிதைகள் அதில் வெளியாகின. வெங்கட் சாமிநாதனின் தொடர் கட்டுரைகள் அதில் வெளியானது. அதே போல் 'அஃக்' பரந்தாமன் செய்த முக்கியமான விஷயம் பிரமிளின் ஓவியங்களை நிறைய வெளியிட்டது.

பரந்தாமனைப் போலவே லினோ கட் வடிவங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர் பிரமிள். எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பிரம்மராஜனும் அப்போது சேலத்தில் படித்துக்கொண்டிருந்தார். அஃக் இதழில் அவரின் பங்களிப்பும் உள்ளது. அவரது முக்கியமான கதைகளும் ஓவியங்களும் அஃக் இதழில் வெளியாகியது. ஒரு படைப்பாளியின் படைப்புகளுக்கு ஒரு இதழையே ஒதுக்கிவிடும் முறையை அவர் கொண்டிருந்தார். 'கண்ணாடியின் உள்ளிருந்து' என்று ஒரே இதழில் பிரமிளின் 38 கவிதைகள் வெளியானது. இந்திரா பார்த்தசாரதியின் முழு நாடகத்தையும் போட்டிருந்தார். எனது 20 கவிதைகளை வெளியிட்டிருந்தார். அப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் வெளியிடப்படாத காலம். இப்படி ஒரு இதழ் முழுக்க ஒரே படைப்பாளியின் படைப்புகளுக்கு அர்ப்பணித்து வெளியாவதால் அவருக்குப் பெரிய வெளிச்சம் கிடைக்கும். அப்படியான வெளிச்சத்தைப் பலருக்கும் வழங்கியவர் 'அஃக்' பரந்தாமன்.

 பிரின்டிங் வேலைகள் அவருக்கு முழுக்க முழக்க அத்துப்படி.  அதே போல் ஜெயகாந்தன் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரைப்போலவே பேசுவது,அவரைப்போலவே உடை அணிவது, அவரைப்போன்ற ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது என ஜெயகாந்தனின் பாதிப்புகள் நிறையவே பரந்தாமனிடம் உண்டு.  நீண்டகாலமாக அப்படித்தான் இருந்தார். பரந்தாமன் குறித்து பேசும்போது அவரின் அம்மா குறித்து பேசாமல் இருக்க முடியாது. மகன் மீதான பாசத்தால் கடன் வாங்கி இவரின் இலக்கிய ஆர்வத்துக்கு உதவி செய்தார்" என்று 'அஃக்' பரந்தாமன் குறித்து நினைவுகூர்ந்த கலாப்பிரியா அவர்களிடம் கடைசியாக எப்போது அவரைச் சந்தித்தீர்கள் என்று கேட்டோம்..

"நானும் கவிஞர் ரவி சுப்பிரமணியனும் இருசக்கர வண்டியில் சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே போய்க்கொண்டிருந்தோம். 2006ம் ஆண்டு என்று நினைவு. ஒரு பஸ் ஸ்டாப்பை கடந்த போது ரவி சுப்ரமணீயம் 'அஃக் பரந்தாமன் நிற்கிறார்' என்றார். 'உடனே நிறுத்துங்கள் பார்க்கலாம்' என்றேன். இறங்கி போய்ப்பார்த்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போதும் கையில் ஒரு ஃபைல் வைத்திருந்தார். யாரையோ ஒரு இயக்குநரைப் பார்க்கப் போகிறேன். கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். காபி சாப்பிடலாம் என்று சொன்னேன். பிடிவாதமாக மறுத்துவிட்டார். அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு. அவர் நிறைய இயக்குநர்களுடன் நட்பாக இருந்தார் என்று கேள்விப்பட்டேன்.ஒரு இயக்குநரின் புத்தகத்தைக் கூட அவர்தான் வடிவமைத்தார் என்றும் கேள்வி. அப்படி யாராவது ஒருவராவது அவருக்கு வாய்ப்புக்கொடுத்திருக்கலாம்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் கவிஞர் கலாப்பிரியா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்