வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (25/07/2017)

கடைசி தொடர்பு:09:29 (25/07/2017)

ஒன்றாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவியின் அழகான உச்சரிப்பில் ஆங்கில எழுத்துகள்! வைரல் வீடியோ #CelebrateGovtSchool

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளியைத் தவிர்த்து தனியார் பள்ளியை நாடி, பெற்றோர் செல்வதற்கு முதன்மையான காரணம் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதே. அதற்காக அதிகச் செலவழிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர். இன்னும் சில பெற்றோர்கள் பள்ளி அமைந்திருக்கும் ஊருக்கே குடிமாறிவிடுகின்றனர். உண்மையில் அரசுப் பள்ளியிலும் சிறப்பாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது என்பதை அரசுப் பள்ளி மாணவியின் வீடியோ நமக்குச் சொல்கிறது.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ள கட்டளை கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அங்கு முதலாம் வகுப்பு படிக்கும் காவ்யா தன் மழலைக் குரலால் ஆங்கில எழுத்துகளை எழுதும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு, தன் மழலைக் குரலால் தெளிவான உச்சரிப்போடு ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார். பின் A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளை எழுதுகிறார். அடுத்து, அவ்வெழுத்துகளைச் சரியான முறையில் உச்சரிக்கிறார். 

 

இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஆச்சர்யமடைவதோடு காவ்யாவுக்கு வாழ்த்துகளையும் பரிமாறி வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியால், அதுவும் பள்ளித் தொடங்கி இரண்டு மாதங்கள்கூட இன்னும் முடிவடையாத நிலையில் எப்படி இது சாத்தியமானது என, அப்பள்ளியின் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் ச.சுகதேவ் அவர்களிடம் கேட்டோம். 

"இந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோர் மனதிலும் ஏற்படும் இயல்பான சந்தேகம்தான் இது. எங்கள் பகுதியில் விவசாயக் கூலி சுகதேவ்வேலைகள் செய்பவர்கள் அதிகம். அவர்களின் பிள்ளைகளே எங்கள் பள்ளியில் அதிகம் படிக்கின்றனர். காவ்யாவின் பெற்றோரும் அப்படியானவர்கள்தாம். எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கெல்லாம் அனுப்பும் சூழலில் அவர்கள் இல்லை. காவ்யாவின் அக்கா சென்ற ஆண்டு மூன்றாம் வகுப்பு படித்தார். அப்போது, காவ்யாவுக்கு நான்கு வயதுதான். காவ்யாவின் பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் என் வகுப்பில் கொண்டு வந்துவிட்டுச் செல்வார்கள். நானும் காவ்யாவை உட்காரச் செய்தேன். ஆனால், காவ்யாவைப் படிக்கவோ, எழுதவோ சொல்ல வில்லை. வகுப்பைக் கவனிக்க விருப்பமிருக்கும்போது கவனிப்பாள்; தூக்கம் வந்தால் தூங்கி விடுவாள். எந்தக் கட்டுப்பாடும் அவளுக்கு விதிக்கவில்லை. இப்படியே சில நாள்கள் சென்றன.

வழக்கம்போல, காவ்யாவைப் பள்ளியில் விட வந்த அம்மா தயங்கியப்படி, 'சார், எல்லோரும் வீட்டுப் பாடம் கொடுக்கிறீங்களாம், காவ்யாவுக்கு மட்டும் கொடுப்பதில்லையாம். அதனால வீட்டுக்கு வந்து அழுகிறா' என்றார். நான் சிரித்துகொண்டே, 'இன்றுமுதல் தருகிறேன்' என்றேன். அதன்படி அன்றையிலிருந்து வீட்டுப் பாடம் கொடுத்தேன். மற்ற மாணவர்கள்கூட மறந்துவிட்டு வந்திருப்பார்கள். ஒரு நாள்கூட காவ்யா வீட்டுப் பாடம் செய்ய மறக்க மாட்டாள். 

இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்ததிலிருந்து காவ்யாவின் ஆர்வம் இன்னும் அதிகரித்து. பொனெடிக் முறையில் ஆங்கில உச்சரிப்பை விரைவாகக் கற்றுக்கொண்டாள். அதை வீடியோவாக எடுத்துப் பதிந்தேன். காவ்யாவைப் பார்த்து வகுப்பின் மற்ற மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அரசுப் பள்ளி

எங்கள் பள்ளியில் செஸ், கேரம்போர்டு போன்ற விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடுவதற்கு முறையான பயிற்சியளிக்கிறோம். கருத்துச் சுதந்திரப் பெட்டியைப் பற்றி அவசியம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குழந்தை நேயப் பள்ளிகளில் ஒன்றாக எங்கள் பள்ளி இருப்பதால், கருத்துச் சுதந்திரப் பெட்டியை வைப்பதற்கு முடிவு செய்தோம். அதையும் நல்ல நாள் ஒன்றில் தொடங்க வேண்டும் என்பதால் கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளில், மாணவர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் விதமாக அந்தப் பெட்டியை வைத்துள்ளோம். மாணவர்களும் அதில் தங்கள் கருத்துகளை எழுதிப் போட்டு வருகின்றனர். அவற்றில் எங்களால் சாத்தியமானவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். 

படிப்பு, தனித்திறன் வளர்ப்பு, விளையாட்டு ஆகியவற்றோடு மாணவர்களின் கருத்துகளை மதிப்பதை எங்களின் கடமையாகக் கொண்டுள்ளோம்" என்கிறார் ஆசிரியர் சுகதேவ்.

அரசுப் பள்ளிகளின் உயிர்ப்பை மேம்படுத்தும் ஆசிரியர்களின் முயற்சிகள் வெல்லட்டும்.


டிரெண்டிங் @ விகடன்