Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல் கலாம் நினைவிடம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் ‘மரம் அய்யப்பன்’ யார்? #Inspiring

tirupur iyappan tree

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின்  நினைவு தினமான ஜூலை 27-ம் தேதி, ராமேஸ்வரத்தில் அவரின் நினைவு மண்டபத்தை இந்தியப் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். அன்றைய தினம், அந்த நினைவு மண்டப வளாகத்தின் ஓர் ஓரத்தில், தான் எடுத்துச் செல்லும் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்துவிட வேண்டும் என்ற தீர்க்கத்துடன் திருப்பூரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கிளம்பியிருக்கிறார் ஒரு மனிதர். அவரின் பயணம் பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அல்ல... பாதயாத்திரையாக.

மரம் அய்யப்பன்... இந்தப் பெயரை கேள்விப்படாதவர்கள் பலர் இருக்கலாம்.  ஆனால் இவர் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் திருப்பூர் மாவட்டத் தெருக்களிலும் நெடுஞ்சாலைகளிலும் சுற்றிக்கொண்டு திரிவதை பலமுறை வேடிக்கை பார்த்திருப்பார்கள் மக்கள்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் இவரைப் பற்றிக் கேட்டால், கண்களில் ஆச்சர்யம் பொங்க சிரித்தவாறு சொல்வார்கள் `மரம் மாமா' என்று.  அதற்குக் காரணம், திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் இந்த மனிதன் நட்டுவைத்துப் பாதுகாத்த பல ஆயிரம் மரங்கள் இன்று அந்த மாணவர்களுக்கு நிழல் தரும் அரண்களாக வளர்ந்து நிற்பதுதான்.

திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள வாடகைக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் இந்த மரம் அய்யப்பன், அடிப்படையில் சமோசா வியாபாரி. தெருத்தெருவாக நடந்துசென்று வீடுகளில் சமோசா வியாபாரம் செய்யும் அய்யப்பன், கடந்த 14 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மரம் நடுவதையும், நட்ட மரங்களைப் பாதுகாப்பதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார். சாதாரண மனிதனாக, தான் உண்டு... தன் குடும்பம் உண்டு என வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருந்த சமோசா வியாபாரி அய்யப்பனை, தன் வீட்டருகே இருந்த அங்கன்வாடியில் நடந்த ஒரு சம்பவம்தான் இன்று `மரம் அய்யப்ப'னாக மாற்றியிருக்கிறது.

maram iyyappan

14 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய வீட்டின் அருகில் செயல்பட்டு வந்த அங்கன்வாடிப் பள்ளியில், தினமும் காலை இறைவணக்கக் கூட்டம் நடைபெறும். அப்போது வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவதும், சில குழந்தைகள் மயக்கமடைந்து கீழே விழுவதும் தொடர்கதையாக இருந்தது. `அந்த இடம் பொட்டல் நிலமாக இருப்பதால்தானே, குழந்தைகள் வெயிலில் நின்று சிரமப்படுகிறார்கள். அங்கன்வாடியைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுவைத்தால், அவை மரங்களாக வளர்ந்து இந்த அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு நிழல் கிடைக்குமே!' என்ற எண்ணம் அப்போது அய்யப்பனுக்குத் தோன்றியிருக்கிறது. இதையடுத்து அங்கன்வாடி அதிகாரிகளிடம் அனுமதிபெற்று, அந்த இடம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவைத்திருக்கிறார். அங்கன்வாடி குழந்தைகளோ, விளையாட்டுப்போக்கில் அந்த மரக்கன்றுகளைப் பிடுங்கி சேதப்படுத்தினர். மீண்டும் மீண்டும் நட்டுவைத்தாலும், அதே நிலைமைதான். எனவே, மரக்கன்றுகளை நட்டுவைத்தால் மட்டும் போதாது. நாம் நட்டுவைத்த மரங்களை நாமே நீர் ஊற்றிப் பாதுகாத்தால்தான் பலன் கிடைக்கும் என யோசித்தவர், தான் நட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்பதையும் வழக்கமாக்கிக்கொண்டார். நட்டுவைத்த மரங்கள் வளர்ந்தன. அங்கன்வாடி சிறுவர்களுக்கோ ஏக மகிழ்ச்சி. அந்த மழலைகளின் சிரிப்பைக் கண்டு  ஆனந்தம்கொண்டவர், அதற்குப் பிறகு  பொறுமையாக அமர்ந்து யோசித்திருக்கிறார்.

மரம் மாமா அய்யப்பன்

`ஒரு சிறிய நிலப்பரப்பில் கொஞ்சம் மரங்களை நட்டதற்கே இத்தனை முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். இந்தப் பணியை நாம் மரணிக்கும் வரை தொடர்ந்தால் எத்தனை எத்தனை உயிர்களில் புன்னகையை தரிசிக்கலாம்' எனக் கணக்குப்போட்டவர், அதை உடனே முன்னெடுக்கவும் செய்திருக்கிறார். வீட்டுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் தொடங்கி, இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 307 அரசுப் பள்ளிகள் வரை ‘மரம் அய்யப்பன்’ நட்டுவைத்த மரங்கள் அந்தப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஆக்சிஜனைத் தந்துகொண்டிருக்கின்றன.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற பள்ளிகளில் நடைபெறும் அரசு விழாக்களில் `மரம் நடுவோம்... நட்ட மரங்களைப் பாதுகாப்போம்' என்ற கோரிக்கையை முன்வைத்து மரம் அய்யப்பன்  விழிப்புஉணர்வு பிரசாரம் நடத்துவார். நினைத்தால் திடீரென கிளம்பி, அவிநாசி, பல்லடம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனி மனிதனாக நடைப்பயணம் மேற்கொண்டு மரம் வளர்ப்பதன் நன்மைகளையும், இயற்கையைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் மக்களிடத்தில் பரப்புரை நடத்துவார். அப்படி விழிப்புஉணர்வு பிரசாரம் கிளம்புவதற்கு முந்தைய தினமே வீட்டில் உட்கார்ந்து அதற்கென பிரத்யேகமான உடையையும் தயாரித்துக்கொள்வார். அதை அணிந்த பிறகுதான் மரம் அய்யப்பனின் நடைபயணம் தொடங்கும்.

மரம் அய்யப்பன்

இதோ.... இப்போது அப்துல் கலாமின் நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, ராமேஸ்வரம் தீவை நோக்கி நடைபோட தொடங்கிவிட்டார் மரம் அய்யப்பன். தலையில் ஒரு மரக்கன்றும், தோளில் அப்துல் கலாம் உருவம் பதித்த ஒரு பேனரையும் சுமந்துகொண்டு திருப்பூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவரை தேடிப் பிடித்தோம்.

பெரும் மகிழ்ச்சியோடு நம்மிடம் பேசத் தொடங்கினார், “அப்துல் கலாம் ஐயான்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும். தமிழகத்தில்  பொறந்து, படிச்சு, விஞ்ஞானியா நாட்டுக்காக உழைச்சவர். குடியரசுத் தலைவராகி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தவர். சில வருடங்களுக்கு முன்பு நான் இப்படி மரம் வளர்ப்பு குறித்து பிரசாரம் செய்துட்டிருந்தப்போ, கோயம்புத்தூர்ல கலாம் ஐயா கலந்துக்கிட்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே அவர் பேசிய பேச்சும், இயற்கை குறித்து அவர் பகிர்ந்துகிட்ட விஷயங்களும்தான், இந்தச் சமுதாயத்துக்காக இன்னும் கூடுதலாக உழைக்கணும்கிற எண்ணத்தை எனக்குள் விதைச்சது. சமூகத்துக்காக நாம்தான் உழைக்கணுமே தவிர, அதை நமக்குச் சாதகமா பயன்படுத்திக்கக் கூடாதுன்னு மனசுல பட்டுச்சு. எனவே, மரக்கன்றுகளை வாங்குவதிலிருந்து, பேருந்தில் ஏறி பள்ளிகளுக்குச் செல்வது வரை எனக்கு செலவாகும் ஒவ்வொரு ரூபாயும் என் சம்பாதியத்துல இருந்துதான் செலவழிக்கிறேன். மற்றவர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட வாங்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கேன். திருமண விழாக்கள்ல விருந்தாளிகளுக்கு இலவசமா மரக்கன்றுகள் கொடுப்பதை இப்போ நிறையபேர் கடைப்பிடிக்கிறாங்க.  மரக்கன்றுகளை வாங்கிட்டு வெளியே வர்றவங்க, வீட்டுக்குப் போறதுக்குள்ளவே சாலையில் அதைத் தூக்கியெறிஞ்சுட்டுப் போறதை பல தடவை நேரில் பார்த்துட்டு தாங்க முடியாத துயரத்துல தவிச்சிருக்கேன்.

அப்துல் கலாம்

ஒவ்வொரு மரக்கன்றும் ஒரு குழந்தை மாதிரி. அதை ரோட்டுல வீசிட்டுப் போக அவங்களுக்கு எப்படித்தான் மனசுவருதோ! யாராவது அப்படிப் பயன்படாத வகையில் மரக்கன்றுகளை வெச்சிருந்தா, அவர்களிடமிருந்து அதை வாங்கி வந்து சரியான இடத்துல நடுவேன். இப்படி ஒவ்வொரு நாளையும் என்னால் முடிந்த அளவுக்கு மரம் வளர்ப்பதிலேயே செலவிடுகிறேன்.

அப்துல் கலாம் ஐயாவின் மரணம், என்னை மிகவும் பாதிச்சது. அந்த மனிதன் என் மனதில் விதைத்துவிட்டுச் சென்ற `நம்பிக்கை' எனும் விதை, இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கு. என் மூச்சு உள்ள வரை அந்த மனிதனின் நினைவாக ஆயிரமாயிரம் மரக்கன்றுகளை இந்தப் பூமித்தாயின் மடியில் நட்டுவைப்பேன். அதற்கான சத்தியத்தை ஏற்கத்தான் கலாமின் நினைவிடத்தை நோக்கி போய்க்கிட்டிருக்கேன்'' என்றார்.

அப்துல் கலாமின் நினைவு மண்டபத் திறப்பு விழா நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் இன்னபிற வி.வி.ஐ.பி-களும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால்  மரம் அய்யப்பன் போன்ற எளியவர்களின் வருகைதான்,  கலாமின் நினைவு மண்டபத்தைக் காலத்துக்கும் தாங்கிப் பிடித்து அவர் புகழை எல்லார்க்கும் கொண்டு சேர்க்கும்!  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close