வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (25/07/2017)

கடைசி தொடர்பு:18:19 (02/07/2018)

அப்துல்கலாம் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (ஜூலை 27) திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட உள்ளது. பாரம்பர்ய மிக்க நினைவு சின்னங்கள், நிறுவனங்களின் வெள்ளிவிழா, பொன்விழா, நூற்றாண்டு விழா போன்ற நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் சிறப்பு அஞ்சல் முத்திரையும் வெளியிடப்படுகிறது. இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் நினைவாக அஞ்சல்தலை, அஞ்சல் உறை, அஞ்சல் முத்திரை ஆகியன வெளியிடப்பட்டன.

கலாம் நினைவு அஞ்சல் உறை

இதேபோல் கலாமின் 2-ம் நினைவு நாளில் திறக்கப்பட உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அவரது நினைவிடத்தைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிடுகிறது. ரூ.20 விலையுடைய இந்த அஞ்சல் உறை நாட்டில் உள்ள முக்கிய அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த அஞ்சல் உறை ஒரு முறை மட்டுமே வெளியிடப்படும் என்பதால் அஞ்சல் தலை சேகரிப்பவர்கள் மத்தியில் இதைக் கொண்டுசெல்ல தனி கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

''மாணவர்கள், இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த டாக்டர் கலாமின் நினைவு அஞ்சல் உறையை மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருமே வாங்கி பாதுகாக்கலாம். தங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். சிறப்பு அஞ்சல் உறையைப் பெறுவதற்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. rmndiv.sr@gmail.com என்ற இணையதள முகவரியிலோ, 04567-221321 என்ற தொலைபேசி வாயிலாகவோ கலாம் சிறப்பு அஞ்சல் உறைக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  உதய்சிங் தெரிவித்தார்.