இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு சிலை !

ஞ்சாவூர் மாவட்டம் ஆச்சம்பட்டியில் அமைந்துள்ளது இயற்கை வேளாண் பண்ணையான செம்மைவனம்.  அங்கு, இயற்கை வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வாருக்கு சுடுமண்ணால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை, குடந்தை ஓவியக்கல்லூரி ஆசிரியரும்,  ஓவியருமான வில்வநாதன் மற்றும் அவரின் மாணவர்கள் மகேந்திரன் மற்றும் பாலமுருகன்  ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

நம்மாழ்வாருக்குச் சிலை

 

இதுபற்றி செம்மைவனத்தின் அமைப்பாளர், இயற்கை ஆர்வலர் செந்தமிழனிடம் கேட்டோம். "மனநிறைவளிக்கும் செயல் ஒன்றைச் செய்திருக்கிறோம். நம்மாழ்வாருக்கு சுடுமண் சிலை ஒன்றைச் செய்துள்ளோம். நானறிந்தவரை அவருக்கான முதல் சிலை இது. மரபு வழிப்பட்ட குயவர் நுட்பங்களுடன் இந்தச் சிலையை மிக நேர்த்தியாகச் செய்துள்ளார்கள் ஓவியர்கள்.

பொதுவாக, கிராம தெய்வங்கள் சிலைகளை உள்ளீடற்றதாகச் செய்வார்கள். அவற்றின் முகம், தோற்றம் ஆகியவை நேர்நிலையில் இல்லாதவை. அதாவது, அந்த உருவங்கள் அனைத்தும் குயவரின் மனதில் எழுபவையே. ஆகையால், உள்ளீடற்றவையாக அவற்றைச் செய்வது எளிது. ஆனால், நேர்நிலை உருவமாக, சமகாலத்தில் வாழ்ந்தவரின் உருவத்தை உள்ளீடற்ற சிலையாக வடிப்பது மிகவும் கடினமான செயல். நம்மாழ்வாரின் இந்தச் சிலை, களிமண்ணால் உள்ளீடற்றதாக வடிக்கப்பட்டுள்ளது. முறைப்படி சிலை அமைக்கப்பட்ட பின்னர், எப்போது வேண்டுமானாலும் செம்மைவனத்தில் உள்ள நம்மாழ்வார் சிலைக்கு வணக்கம் செலுத்த வரலாம்.

ஓவியர் மற்றும் மாணவர்கள்

நம்மாழ்வாருக்கு நாடெங்கும் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். நம்மாழ்வாருக்கான காணிக்கையாக, நாட்டு விதைகளை எடுத்துவாருங்கள். அவரது சிலையின் பீடத்தைச் சுற்றிலும் விதைச் சேகரிப்புக் கொள்கலன்கள் அமைக்க உள்ளோம். உங்களுக்குக் கிடைக்கும் நாட்டு விதைகளை ஒரு பிடியேனும் எடுத்து வந்து, அவற்றில் போடுவது அவருக்குச் செலுத்தும் காணிக்கை" என்கிறார் பெருமிதத்தோடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!