‘மூன்று நாளில் நல்ல செய்தி!’ - மர்மம் கலைக்கும் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive

‘மூன்று நாள்களுக்குள் நல்ல முடிவை அறிவிப்பேன்' என்று டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீபா, திவாகரன் என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. அ.தி.மு.க-வில் உருவான அணிகளால் தொண்டர்களின் நிலைமை மதில்மேல் பூனையாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தைரியத்தைப் பார்த்து மன்னார்குடி குடும்ப உறவுகளும் அ.தி.மு.க-வினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சிறையில் விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்ட குற்றச்சாட்டால், சசிகலாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. சசிகலாவைச் சந்திக்க முடியாமல் அவரது ஆதரவாளர்கள் சிரமப்பட்டுவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சென்றார் டி.டி.வி.தினகரன். ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சென்னை திரும்பி வந்த அவர், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், "அ.தி.மு.க-வில் உதயமாகியுள்ள அணிகளால் கட்சியின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் பிரிந்துள்ளதால், அ.தி.மு.க பலவீனமடைந்துவருகிறது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அணிகள் தாவும் படலமும் நடந்துவருகிறது. மக்கள் பிரச்னைகளைவிட அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களைக் கவனிக்கவேண்டியுள்ளது. அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் சிக்கலை ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில், டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். ஆனால், போலீஸார் தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரனின் பெயர் இல்லை. அதுபோல, சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் உண்மை தெரியவரும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் ஒன்றிணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தனர். ஆனால், இரண்டு அணிகளும் இதுவரை ஒன்றிணையவில்லை. இரண்டு அணிகளிலும் நிலவிய முரண்பட்ட கருத்துகளால், அணிகள் இணைவதில் சிக்கல் எழுந்தது.

இந்தச் சமயத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் சமீபத்தில் சேர்ந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து இன்னும் சிலர் அணி மாற முடிவுசெய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணிகள் மாறுவதால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க-வுக்கு எந்தவிதப் பயனுமில்லை. 

அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே டி.டி.வி.தினகரன் விரும்பினார். அதனால்தான், தனக்கு 36 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்த நிலையிலும் அதிரடியாக எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அமைதியாகவே இருந்துவருகிறார். அந்த அமைதிக்கான விடை, இன்னும் மூன்று நாள்களில் தெரிந்துவிடும் என்று எங்களிடம் தெரிவித்துள்ளார். அந்த முடிவுக்காக அ.தி.மு.க தொண்டர்களும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் ஆர்வமாகக் காத்திருக்கிறோம்" என்றனர். 

- டி.டி.வி.தினகரன் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்று அவருக்கு வலதுகரமாகச் செயல்படும் எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசினோம். "அ.தி.மு.க-வினர் பிரிந்து செயல்படுவதால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்தன. அது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திவாகரனுடன் ஏற்பட்ட மோதலுக்கு முதலில் தீர்வு காணப்பட்டுள்ளது.

அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க அணிகள் ஒன்றிணைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான இறுதிமுடிவை எடுக்க டி.டி.வி.தினகரன், திவாகரன் ஆகியோர்  சசிகலாவைச் சந்திக்க இன்னும் சில தினங்களில் பெங்களூரு செல்கின்றனர். அதன்பிறகு ஜூலை 28-ம் தேதிக்குள் அ.தி.மு.க குறித்த நல்ல முடிவை கட்சித் தலைமையே அறிவிக்கும். அதன் பிறகு, தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க தொண்டர்களைச் சந்திப்பார்"என்றார்.

இதுகுறித்து டி.டி.வி.தினகரனின் கருத்தைக் கேட்க அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். ஆனால் அவர், பதிலளிக்கவில்லை.

அப்செட்டில் ஓ.பன்னீர்செல்வம் 

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். அப்போது, ஆறுக்குட்டி எம்.எல்.ஏ, 'ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தன்னை மதிக்கவில்லை' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'எங்கள் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ-வுக்கு உரிய மரியாதை கொடுத்தோம்' என்று தெரிவித்தனர். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., அணி மாறியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், 'முதல்ஆளாக அவராக வந்தார். அவரே முதல் நபராகச் சென்றுவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள இன்னும் சிலர், அணிகள் மாற முடிவுசெய்துள்ள தகவல், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரெல்லாம் அணிகள் மாறப்போகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் நெருக்கமானவர்கள் ரகசியமாக விசாரித்துள்ளனர். அதில், முன்னாள் அமைச்சர் ஒருவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்துள்ளது. இதனால், அவரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சமரசப்படுத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர், அப்செட்டில் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!