அமராவதி அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!

’விவசாயம் பொய்த்துப்போன நிலையில், தங்கள் கால்நடைகளை காப்பாற்றுவதற்காகவாவது தமிழக அரசு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெற்றுவருகிறது. மேலும், நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக இந்த அணை உள்ளது. சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் பருவமழை பொய்த்துப்போனதால், இந்த அணை நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்ததுடன், கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும் பனை மரங்களும் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் பல விவசாயிகள் பனை மரம் மற்றும் தென்னை மரங்களை வெட்டி விற்கத்துவங்கியுள்ளனர். 

90 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில், தற்போது 54 அடி நீர்மட்டம் இருக்கிறது. நேற்று 317 கனஅடி நீர் அமராவதி அணைக்கு வந்த நிலையில், அதிலிருந்து குடிநீர் தேவைக்காக 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. விவசாயம் பொய்த்துப்போன நிலையில், எஞ்சியிருக்கும் கால்நடைகளையாவது காப்பாற்ற கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அமராவதி அணையை நம்பி மூன்று போக நெல் சாகுபடி நடந்த நிலையில், தற்போது ஒருபோகம் கூட சிறப்பாக செய்ய முடிவதில்லை. தற்போது ஆடிப்பட்டத்துக்காக நாற்று நடவு செய்யும் பணிகள் நடைபெற தண்ணீர் திறக்க கோரிக்கைவைத்தும், நீர் இருப்பு குறைவாக உள்ளதால், பாசனத்துக்காக அணையில் இருந்து நீர் திறக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அதனால் தற்போது எங்களது வருமானத்துக்கு கால்நடைகள்தான் ஆதாரமாக உள்ளன. எனவே, கால்நடைகளைக் காப்பாற்றவாவது தமிழக அரசு உடனடியாக அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!