வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (25/07/2017)

கடைசி தொடர்பு:14:11 (25/07/2017)

'நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கக் கூடாது...’ திவ்யபாரதி கைதுக்கு தமிழிசை விளக்கம்..!

''நாட்டில் எந்த வகையிலும் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும்" என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 

டாக்டர் தமிழிசை

இந்தியாவின் 14-வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள, தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த டாக்டர் தமிழிசையிடம், விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பா.ஜ.க-வினரால் மிரட்டப்பட்டுள்ளாரே என்று கேட்டபோது, ''மிரட்டல் அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. டெல்லியில் நடத்தும் போராட்டத்தை, அச்சுறுத்தி வாபஸ் பெறவைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. அது எங்களுக்குத் தேவையும் இல்லை. இப்போதுகூட, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்துள்ளார்கள். விவசாயிகள் நகைக் கடன் பிரச்னையில் குறிப்பிட்ட காலத்துக்குள் வட்டியைக் கட்டவில்லை என்று  நகைகளை ஏலத்துக்கு விட்டுவிடுகிறார்கள்;  அப்படி செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்தப் பிரச்னை பற்றி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசிவருகிறோம். இப்படி நல்ல காரியங்களுக்காக பரிந்துரைசெய்வதைப் பெருமையாக நினைக்கிறேன்'' என்றார்.

சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி, 2009-ம் ஆண்டு வழக்கின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, ''பின்புலம் இல்லாமல், குற்றச்சாட்டு இல்லாமல் யாரும் கைதுசெய்யப்பட மாட்டார்கள். நக்சலைட் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் எந்த வகையிலும் தீவிரவாதம் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அரசு கவனமாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அதே நேரத்தில், ஒரு குற்றவாளிகூட தப்பிவிடக்கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க