“வாழ்க்கை ஒரு வட்டம் தயாரா இருங்க...” - எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கும் தி.மு.க  | DMK MLA warns Chief minister Edappadi Palanisami

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (25/07/2017)

கடைசி தொடர்பு:17:57 (25/07/2017)

“வாழ்க்கை ஒரு வட்டம் தயாரா இருங்க...” - எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கும் தி.மு.க 

திவ்யா பாரதி

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிராக கருத்துகளை எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது சகட்டுமேனிக்கு வழக்குகள் பாய்ந்தன. பலர் கைது நடவடிக்கைகளுக்கும் ஆளானார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசும் சமூக ஆர்வலர்கள் பலரை தொடர்ந்து கைது செய்துவருகிறது. இந்நிலையில் இந்தக் கைதுப் பட்டியலில் இன்று இணைந்திருக்கிறார் 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி. தமிழகத்தின் பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு எதிராகக் கருத்துகளை உருவாக்கியிருக்கும் இந்தக் கைது தொடர்பாக, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தன் கடுமையான கண்டனத்தைத் தனது முகநுால் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், “மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் போன 'திருமுருகன்' கைது. கதிராமங்கலத்துக்காகப் போராடிய 'மாணவி வளர்மதி' மீது குண்டர் சட்டத்தில் கைது. முகநூலில் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த 'மாணவர் குபேரன்', சுத்திகரிப்பு தொழிலாளர்களின் அவலத்தை வெளிப்படுத்திய 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் 'திவ்யபாரதி' கைது செய்யப்பட்டிருக்கிறார். வன்முறைக்குச் செல்லாமல், ஆயுதம் ஏந்தாமல் போராடும் இவர்கள் மீது சட்டத்தை ஏவி மிரட்டுவதுதான் பயங்கரவாதம்.

எஸ்.எஸ். சிவசங்கர் இதற்காக உங்கள் மீதுதான் சட்டம் பாய வேண்டும் எடப்பாடி. கர்நாடகாவில் உங்கள் சம்பந்தி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்தது. இது பண மதிப்பிழப்பீட்டு நடவடிக்கைக்கு எதிரான செயல்பாடு. உங்கள் சம்பந்தி கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி விசாரணைக்கு அழைத்தவாறு உள்ளது வருமான வரித்துறை. அவர் இன்னும் பதவியில் இருப்பது சட்ட அவமதிப்பு.

குட்கா போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர், டி.ஜி.பி என வருமான வரித்துறையே ஆதாரம் கொடுத்த பிறகும், வாய் திறக்காமல் இருப்பதும், அவர்களை இன்னும் பதவியில் வைத்திருப்பதும்தான் ராஜ துரோகக் குற்றம். இதற்காக நீங்கள்தான் கைது செய்யப்பட வேண்டியவர்.

நேரடியாகக் குற்றம்சாட்டுகிறேன். அதிகாரம் இருப்பதற்காக ஆடாதீர்கள். உங்களுக்கு இருப்பது எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுதான், வெகு மக்கள் ஆதரவல்ல. வைரமுத்து சொன்னதுபோல, "வெறும் கம்மங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள." இவ்வளவுதான் வாழ்க்கை எடப்பாடி.

அடுத்தவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர். "தங்கத்தைப் பூட்டி வைத்தாய் வைரத்தைப் பூட்டி வைத்தாய் உயிரைப் பூட்ட ஏது பூட்டு" இதுவும் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னதுதான், மிஸ்டர் எடப்பாடி.

# வாழ்க்கை ஒரு வட்டம், தயாராயிருங்க !” - இவ்வாறு அதில் எழுதியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close