வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (25/07/2017)

கடைசி தொடர்பு:12:34 (26/07/2017)

“நல்லவர்போல வேஷம் போட்டு ஏமாற்றிவிட்டார் பன்னீர்செல்வம்!'' - கொதிக்கும் மக்கள்

 

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்காக, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகப் போராடிவந்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்தக் கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள, 18.50 சென்ட் நிலம் ஆகியவற்றைச் சுமார் 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்குத் தனது நெருங்கிய நண்பரும் லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவருமான சுப்புராஜ் என்பவருக்கு ஓ.பன்னீர்செல்வம் விற்றுவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பன்னீர்செல்வம்

கடந்த 13-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளர் முன்னிலையில் லெட்சுமிபுரம் கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், ''சம்பந்தப்பட்ட கிணற்றில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கிணற்றை நம்பி 44 ஏக்கர் தென்னை பயிரிட்டு இருப்பதால், முதலில் அந்த 44 ஏக்கர் நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு, கிணற்றை ஊருக்குத் தானமாக எழுதிவைக்கிறேன். நிலத்தை வாங்கிக்கொள்ள 90 நாள்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் நிலத்தை வாங்கவில்லை என்றால், நிலத்தோடு சேர்த்து கிணற்றையும் வேறு ஒருவருக்கு விற்றுவிடுவேன்” என்று கூறினார் ஓ.பி.எஸ்.

இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், வீட்டுக்குத் தலா 20 ஆயிரம் வீதம் சுமார் 6 கோடி ரூபாயை வசூல் செய்து அந்த 44 ஏக்கர் நிலத்தை வாங்கத் தயாராக இருந்தனர். வாங்கப்போகும் நிலத்தின் ஆவணங்களைப் பார்க்க எண்ணிய கிராம மக்கள், அதற்காக விண்ணப்பித்தனர். ஆனால், ஆவணங்களைப் பெற முடியவில்லை. சந்தேகமடைந்த கிராம மக்கள், சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று சர்வே எண்கள் மூலமாக அந்த நிலத்துக்கான வில்லங்கச் சான்றிதழ் பெற்றனர். அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமியின் பெயரில் இருந்த நிலம் மற்றும் கிணற்றைக் கடந்த ஜூலை 12-ம் தேதி சுப்புராஜ் என்பவரின் பெயருக்கு விற்று பத்திரம் பதிந்திருப்பது தெரியவந்தது.

நம்பவைத்து ஏமாற்றிய ஓ.பி.எஸ்.!

வில்லங்கச் சான்றிதழைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று முன்தினம் (ஜூலை 23) கிராம கமிட்டியைக் கூட்டினர். சம்பந்தப்பட்ட வில்லங்கச் சான்றிதழ் நகலை மக்களுக்குக் காட்டினர். அப்போது பேசிய கிராம மக்களில் சிலர், ''கடந்த ஜூலை 13-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு ஒருநாளுக்கு முன்னரே தன் மனைவி பெயரில் இருந்த நிலத்தை விற்றுவிட்டு, எதற்காக எங்களுக்கு
90 நாள்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்... ஏன் நல்லவர்போல வேஷம் போட வேண்டும்... இப்படி எங்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டாரே பன்னீர்செல்வம். அவருக்கு நாங்கள் என்ன துரோகம் செய்தோம்... குடிக்கத் தண்ணீர் கேட்டது ஒரு குற்றமா” என்று ஆதங்கப்பட்டனர்.

கிணற்றைத் தர மறுக்கும் சுப்புராஜ்!

மக்கள்சுப்புராஜ், லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், கிராம கமிட்டிக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர், “அந்தக் கிணற்றை மட்டும் நீங்கள் கேட்காதீர்கள். என்னால் கொடுக்க முடியாது. அதைச் சுற்றியுள்ள நிலத்தை வேண்டுமானால் தருகிறேன்” என்று வெளிப்படையாகப் பேசினார். அப்போது, சுப்புராஜ் தரப்பினருக்கும் கிராமத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுப்புராஜ் பேசியதைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று தெரியாமல் திணறி நிற்கிறார்கள்.

விற்கப்பட்ட நிலத்துக்காக சென்னையில் இருந்து அவசர அவசரமாக விமானம் மூலம் மதுரை வந்து இறங்கி, உடனே தேனி வந்து சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்த என்ன காரணம்? ''கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்...
90 நாள்களுக்குள் அந்த 44 ஏக்கர் நிலத்தை வாங்கினால், கிணற்றையும் தருகிறேன்'' என்று உறுதியளித்த ஓ.பன்னீர்செல்வம், மக்கள் ஒற்றுமையாக இருந்து பணத்தைச் சேர்த்துவிடுவார்கள். நிலத்தை வாங்கினால் தனக்கு அவமானம் ஏற்படும் என்று தெரிந்துதான், உறுதியளிக்கும் முன்பே நிலத்தையும் கிணற்றையும் விற்றுவிட்டார். அதை லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கே விற்றிருப்பது பிரச்னையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்வதற்காக அல்ல, ஊருக்குள் பிரச்னையைத் தூண்டிவிடுவதற்காகவே. இதுவும் ஒருவகையில் பழிக்குப்பழி போலத்தான்!


டிரெண்டிங் @ விகடன்