வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (25/07/2017)

கடைசி தொடர்பு:18:30 (25/07/2017)

தேவதானப்பட்டி குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு.!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் ஆய்வு நடத்தினார். சுமார் 5.10 கோடி மதிப்பீட்டில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தெளிவான விளக்கமளித்தார்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் வெங்கடாசலம் கூறுகையில், "தேவதானப்பட்டி பேரூராட்சி மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதற்காகவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில், நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 1.20 கோடி ரூபாயும், உள்கட்டமைப்பு இடைவெளி பூர்த்தி திட்டத்தின் கீழ் சுமார் 4.80 கோடி ரூபாயும் என மொத்தமாக 5.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன.

தற்போது இப்பேரூராட்சியில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவான 7 லட்சம் லிட்டர் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே தனிநபர் ஒருவருக்கு நாள் ஒன்றிற்கு 90 லிட்டர் என்ற கணக்கீட்டின் படி சுமார் 16.20லட்சம் லிட்டர் தண்ணீர் (உச்ச காலநிலை) வழங்கும் பொருட்டு இத்திட்டம் செயல்பட இருக்கிறது. இதனால் தேவதானப்பட்டி மக்களுக்குக் குடிநீர் பிரச்னை என்ற ஒன்றே இருக்காது. இப்பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.