‘வந்தே மாதரம்’ தேசிய கீதமாகிறதா? பள்ளிகளில் கட்டாயமாக்குவது ஏன்? ஆதரவும் எதிர்ப்பும் | Political leaders comment on vande mataram order

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (25/07/2017)

கடைசி தொடர்பு:19:32 (25/07/2017)

‘வந்தே மாதரம்’ தேசிய கீதமாகிறதா? பள்ளிகளில் கட்டாயமாக்குவது ஏன்? ஆதரவும் எதிர்ப்பும்

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை வாரம் ஒருமுறை கட்டாயம் பாடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வந்தே மாதரம் குறித்த கேள்விக்கு, சரியாக விடையளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை’ என வீரமணி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்பி.முரளீதரன் வசம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரரின் கேள்வி தவறாகத் திருத்தப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் அந்த மதிப்பெண் வழங்கினாலும் அவர் தேர்ச்சி அடைய வேண்டிய மதிப்பெண் பெறவில்லை என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீரமணிக்கு 1 மதிப்பெண்ணை வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி 'வந்தே மாதரம்' தொடர்ந்து பாடப்படாமல் இருப்பதாலே அது எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்கிற குழப்பம் நிலவுகிறது. எனவே பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வாரம் ஒருமுறையாவது வந்தே மாதரம் பாட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும் பாட விருப்பமில்லாதவர்கள் உரிய விளக்கம் சொன்னால் பாடுவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடுவது குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் நிலவி வரும் வேளையில் இந்த உத்தரவு குறித்து பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் எழுத்தாளர் மதிமாறன் ஆகியோரிடம் கேட்டோம்.  

வந்தே மாதரம்

"முதலில் இந்த உத்தரவு குறித்து கருத்து கேட்பதே தவறு என்று சொல்லுவேன். ஒரு நாட்டுப்பற்று வளர்க்கும் பாடலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்புதான் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. இதில் வேறுபாடு இருக்குமா என்ன ? பள்ளிக்கூடங்களில் 'வந்தே மாதரம்' பாட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக, நாமாக அல்லவா பாடியிருக்க வேண்டும். மாநில அரசும் பள்ளி நிர்வாகங்களும் இதைக் கட்டாயமாக்கியிருக்க வேண்டாமா? இதை நீதிமன்றம் அறிவுறுத்தும் வகையிலா இருப்பது? உலகத்திலேயே தேசிய கீதம் பாட சட்டத்தின் எந்த ஷரத்தில் சொல்லியிருக்கிறது என்று கேட்கும் வக்கிரமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்கள் இருப்பது இந்த நாட்டில்தான். இது பாடவேண்டுமா என்கிற கேள்விக்கு அப்பாற்பட்டது. இதை உடனடியாக பின்பற்றவேண்டும்.நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்" என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்

இது குறித்து எழுத்தாளர் மதிமாறன் தெரிவிக்கையில் "இது அதிர்ச்சியளிக்கும் உத்தரவு. வந்தே மாதரம் எழுதப்பட்டிருக்கும் மொழி வங்காளம். வங்காள மொழியை ஆட்சிமொழியாக கொண்ட மேற்கு வங்க மாநிலத்திலேயே இப்படி ஒரு நடைமுறை கிடையாது. அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் அங்கேயே இருக்கிறது.  அது இந்துமத சார்பான பாடல் என்கிற விமர்சனம் மற்ற மதத்தினர் மட்டுமின்றி மத அடையாளங்களைத் துறந்தவர்கள்,முற்போக்காளர்கள் மத்தியிலும் உள்ளது.  பொதுவாகவே மதவாதிகளுக்கு தமிழ்நாடு என்கிற பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய, மதச்சார்பற்ற மாநிலத்தின் மீது எரிச்சல் இருக்கும். குறிப்பாக பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு இருக்கும். எனவே இங்கிருந்து வந்தே மாதரம் பாடவேண்டும் என்பது போன்ற தங்களின் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றன. இதில் இன்னொரு செய்தி இந்திய தேசிய கீதம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவில் வாழும் பல்வேறு மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பாடப்பட்ட வங்காள மொழிப்பாடல் அது. அதில் தெற்கே உள்ள மக்களை 'திராவிடர்' என்றுதான் குறிக்கிறார் ரவீந்தரநாத் தாகூர். 1910ல் எழுதப்பட்ட அந்தப் பாடலை  சினிமா தியேட்டரில் பாட வலியுறுத்தினார்கள். ஆனால் மதச்சார்பான கருத்துக்கள் கொண்ட வந்தே மாதரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடச்சொல்கிறார்கள்.   

மதச்சார்பற்ற சொற்களோடு, இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் பிரதிநிதிப்படுத்தும் சொற்களோடு உள்ள 'ஜனகணமண' எனத் தொடங்கும் தற்போதைய தேசிய கீதத்தை மாற்றிவிட்டு தங்களின் மதசார்பான  கொள்கையோடு ஒத்துப்போகும்  'வந்தே மாதரம்' பாடலைத் தேசிய கீதமாக அறிவிப்பார்கள். அதற்கான முன்னோட்டமாக இந்த உத்தரவைப் பார்க்கிறேன். இது வன்மையாகக் கண்டிக்கக்கூடியது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்