Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு டெங்கு காய்ச்சல்?' -சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி #VikatanExclusive

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அஸ்லம் பாஷா 

ஆம்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அஸ்லம் பாஷா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு நாள்களாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிய முடியாமல் மருத்துவர்கள் திணறிவருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் அஸ்லம் பாஷா. இவர், மனித நேய மக்கள் கட்சியில் மாநில அமைப்புச் செயலாளராக உள்ளார். மேலும், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்தச் சூழ்நிலையில் கடந்த 18-ம் தேதி அஸ்லம் பாஷாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூன்று நாள்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதன்பிறகு வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூன்று நாள்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால், உடல்நலம் சரியாகவில்லை. இதையடுத்து கடந்த 22-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால், அவருக்கு எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இன்று காலை டாக்டர்கள் தெரிவித்தனர்.

 'அவருக்குரிய அறிகுறிகளைப் பார்க்கும்போது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். இருப்பினும் பரிசோதனை முடிவுக்குப்பிறகே அவரது உடல் நலக்குறைவுக்கான காரணத்தைச் சொல்ல முடியும்' என்கின்றனர் மருத்துவர்கள். முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்துவருகின்றனர். 

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அஸ்லம் பாஷா

 இதுகுறித்து ம.ம.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் எஸ்.ஏ.ஷேக்முஹம்மது அலி கூறுகையில், "சுகாதாரச் சீர்கேடு காரணமாகத் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எந்தவகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிவதற்கு முன்பே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்துவிடுகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக சுகாதாரத்துறை மூடிமறைக்க முயல்கிறது. எனவே, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கையைத் தமிழக சுகாதாரத்துறை எடுக்க வேண்டும்" என்றார்.

டெங்கு காய்ச்சல் குறித்து சென்னை டாக்டர்களிடம் பேசினோம். "தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் உள்ளன. டெங்கு காய்ச்சலைக் கண்டு மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இது, குணப்படுத்துகிற காய்ச்சல்தான். தொடர்ந்து இரண்டு நாள்கள் காய்ச்சல் இருந்தால் டாக்டரை அணுகி அதற்குரிய பரிசோதனைகள் செய்யவேண்டும். அப்போது, டெங்கு காய்ச்சல் என்று கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர்காக்கும் ஓ.ஆர்.எஸ். போன்ற நீராகாரம் தேவையான அளவு சாப்பிட வேண்டும்.

காய்ச்சல் குறையவில்லை என்றால் பருத்தியாலான துண்டை சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் நனைத்து, ஈரத்துணியை நெற்றி, கழுத்து, அக்குள், நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் துடைத்துவிட்டால் காய்ச்சல் குறையும். ஐஸ்கட்டி அல்லது மிகவும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது. காய்ச்சல் குணமாகியபிறகு மூன்று நாள்களுக்குக் கவனமாக இருக்க வேண்டும். பசியின்மை, சோர்வு ஆகியவை இருந்தால் டாக்டரை மீண்டும் அணுக வேண்டும். டெங்குவை சரியாகக் கவனிக்காமல் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் இறந்துள்ளனர். ஆனால், அவர்கள் டெங்குவால் இறந்ததாகக் கணக்குக் காட்டப்படுவதில்லை" என்றனர்.

 டெங்கு காய்ச்சலுக்கு 18,700 பேர் பாதிப்பு 

இந்தியா முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநிலத்தில் 9,606 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 17 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், டெங்கு பாதிப்பில் கேரள மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அடுத்து, இந்தாண்டு ஜூலை 2-ம் தேதிவரை தமிழகத்தில் 4,174 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகத்தில் 1,945 பேரும்  குஜராத்தில் 616 பேரும் ஆந்திராவில் 606 பேரும் மேற்கு வங்கத்தில் 469 பேரும் டெல்லியில் 100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close