வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (25/07/2017)

கடைசி தொடர்பு:14:20 (26/07/2017)

"காசும் இல்ல...காப்பாத்த வழியும் தெரியல" மகனின் ரத்தப்புற்றுநோயால் கலங்கும் தாய்

 

‘‘எப்பவும் ஓடியாடி விளையாடிட்டே இருப்பான். ஸ்கூல்விட்டு வந்ததும் அப்பாகிட்ட அவ்ளோ கேள்வி கேட்பான். 'கலெக்டருக்கா படிக்கப் போறே? எதுக்குடா இவ்ளோ கேள்வி?'னு கிண்டல் பண்ணுவேன். 'இவன் பெரிய ஆளா வருவான்'னு மனசுக்குள்ளே சந்தோஷப்படுவேன். பட்டாம்பூச்சியாட்டம் திரிஞ்ச என் செல்லம் இப்போ ரத்தப் புற்றுநோயால் படுக்கையில் கெடக்குறான். இவனை உசுரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு வேண்டாத சாமியில்லை'' என்று  கண்ணீர்த் துளிகளால் வார்த்தைகளையும் மனதையும் ஈரமாக்குகிறார் ராதா. இவர் ரத்தப்புற்று நோய்க்காக கேரளத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரவீன்குமாரின் தாய் ஆவார். 

ரத்தப் புற்று

யார் இந்த பிரவீன்குமார்? 
சேலம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவரான ராஜா, தறி ஓட்டும் தொழிலாளி. இவர் மனைவி ராதாவுக்கும் தறி ஓட்டுவதுதான் தொழில். வேலைக்காக, கோவை மாவட்டத்தின் எலச்சிபாளையத்தில் வசிக்கிறார்கள். வாரக் கூலி அடிப்படையில் தறி நெய்யும் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். முதல் மகன் கோகுல்ராஜ் பிளஸ் ஒன் முடித்துள்ளார். அவருக்குச் சிறுநீர் வருவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். இரண்டாவது மகன் பிரவீன்குமார், ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். ரொம்பவே துறுதுறுப்பான பிரவீன்குமார், மூன்று மாதங்களுக்கு முன்பு அடிக்கடி சோர்ந்துபோக ஆரம்பித்தார். 

இதுபற்றி சொல்லும்போதே அவர் தந்தை ராஜாவுடைய குரல் தடுமாறுகிறது. ‘‘எப்பவும் சுறுசுறுப்பா இருக்கிறவன், 'ஸ்கூலுக்கு நடந்துபோக முடியலைப்பா, வண்டியில் கொண்டுபோய் விடுங்க'னு சொன்னான். அதைச் சாதாரணமா நினைச்சுத்தான் வண்டியில் விட ஆரம்பிச்சேன். ஞாயிற்றுக்கிழமைன்னா கறிக்குழம்பு விரும்பிச் சாப்பிடுவான். மதியம் ஃப்ரெண்ட்ஸோடு கிரிக்கெட் விளையாடப் போய்டறவன் அன்னிக்கு வீட்டிலேயே சுருண்டுப் படுத்துட்டான். கண்கள் வீங்க ஆரம்பிச்சது. பயந்துபோய் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். டெஸ்ட் பண்ணிட்டு காய்ச்சல் எதுவும் இல்லைன்னு சொன்னாங்க. ஆனாலும் எப்பவும் சோர்வாகவே இருந்தான். விளையாடப் போன இடத்துல காத்து கருப்பு பிடிச்சிருக்கலாம்னு கோயில் கோயிலா அலைஞ்சோம். விரதமிருந்து எல்லாச் சாமிகளையும் வேண்டிக்கிட்டோம். நாளாக நாளாக பையன் நிலைமை ரொம்ப மோசமாயிட்டே போச்சு. சேலம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். அங்கேதான் அவனுக்கு ரத்தப்புற்று நோய் இருக்கிறது தெரிஞ்சது. அடையார் கேன்சர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. போற வழியில்தான் இன்னொரு மனுஷன் எங்க கண்ணைத் தொறந்தார்’’ என்றார் ராஜா. 

தொடர்ந்த ராதா, ‘‘பிரவீனின் கண்ணும் முகமும் வீங்கியிருந்தால் முகத்தை மூடி ரயிலில் சென்னைக்கு கூட்டிட்டுப் போனோம். எங்களைப் பார்த்த ஒருத்தர், தன் அம்மாவுக்கும் இதேபோல புற்றுநோய் இருந்ததாகவும் கேரளாவில் இருக்கிற ஆஸ்பத்திரியில் சரி பண்ணிட்டதாகவும் சொன்னார். எங்க பையனையும் காப்பாத்திட முடியும் என்கிற நம்பிக்கை வந்துச்சு. காட்பாடியிலேயே இறங்கிட்டோம். வேலூர் சி.எம்.சி.யில் மறுபடியும் பிளட் டெஸ்ட் பண்ணிட்டு, திருவனந்தபுரத்தில் இருக்கிற ரீஜனல் கேன்சர் சென்டருக்குக் கூட்டிட்டுப் போனோம். 

பையனை டெஸ்ட் பண்ணிப் பார்த்த டாக்டருங்க 'பயப்படாதீங்க காப்பாத்திடலாம். ஆனா, ஏழு மாசம் இங்கேயே தங்கி சிகிச்சை எடுக்கணும். அஞ்சு லட்சத்துக்கும் மேலே செலவாகும்'னு சொன்னாங்க. நாங்க தறி நெய்து சம்பாதிக்கும் காசு சாப்பாட்டுக்கே போதாது. முதல் மகனுக்காக கையிலிருந்த பணத்தைச் செல்வழிச்சு ஆபரேஷன் பண்ணியிருந்தோம். இப்போ என்ன செய்யறதுன்னு இடிஞ்சி போயிருக்கோம். பையனை காப்பாத்திடணும், அதுக்காக என் உசுரையும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் கடன் வாங்கி, இதுவரைக்கும் ரெண்டு லட்சம் செலவு பண்ணிட்டோம். மூணு மாசத்து சிகிச்சையில் பையன் கொஞ்சம் தேறியிருக்கான். அவன் மொகத்துல இப்போதான் சிரிப்பையே பார்க்க முடியுது. பல நாள் கைலயில் காசு இல்லாமல் விடிய விடிய தூங்காமல் அழுதுட்டே இருந்திருக்கேன். இப்போ நம்பிக்கை கிடைச்சிருக்கு. ஆனாலும் இதுக்கு மேலே யார்கிட்ட கை ஏந்துறதுன்னு தெரியலை. நல்ல உள்ளங்கள் உதவினா எப்பவும் நன்றியோடு இருப்போம்’’ என்று உருகுகிறார் ராதா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்