வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (26/07/2017)

கடைசி தொடர்பு:10:40 (26/07/2017)

சென்ற ஆண்டை விட அதிகரித்த வெயில்... காரணம் என்ன?

வெயில்

'ஆடிமாசக் காத்துல அம்மியே பறக்கும்' என்பது கிராமங்களில் சொல்லப்படும் பழமொழி. ஆனால், 'அடிக்கும் அனல் காற்றில் சாலைகளில் வெப்ப அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வழக்கமாகக் கோடையிலும், அக்னி வெயில் நடக்கும் காலநிலையிலும் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் நாள்களிலும், வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும் நாள்களிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டு வரை இப்படித்தான் இருந்து வந்தது. இதற்கு மாறாக இந்த வருடம் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலான இடங்களில் பெய்த மழையின் காரணமாக வெப்பம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க, கடந்த சில நாள்களாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை விகிதம் குறைந்து காணப்படுவதும் ஒரு காரணியாக இருக்கலாம். சாதாரணமாகவே நகரங்களில் வெயில் கொளுத்தும். இதில் தலைநகர் சென்னையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிக மழை பெய்தாலும், நீர் மேலாண்மை முறையாக இல்லாததால் பாதிக்கப்படும், அதிக வெயில் அடித்தாலும், மரங்கள் அதிகமாக இல்லாமல் பாதிக்கப்படும். வெப்பநிலையைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம்.

Date Actual Temp Hist. Avg.
Mon 18/7/2016 36°/23 36°/27°
Tue 19/7/2016 32°/24° 36°/27°
Wed 20/7/2016 33° /24° 36°/27°
Thu 21/7/2016 32° /25° 36°/27°
Fri 22/7/2016 35° /26° 36°/27°
Sat 23/7/2016 32° /26° 36°/27°
Sun 24/7/2016 35° /26° 36°/27°
Mon 25/7/2016 34° /26° 36°/27°
Tue 26/7/2016 34° /25° 36°/27°

 

கிடைத்த தகவலின்படி, சென்னையில் கடந்த ஒரு வாரமாகப் பதிவான வெப்பநிலை, சென்ற வருடத்தை விட அதிகம். இந்த மாதத்தில் வெப்பநிலையானது குறைவான வெப்பநிலை 27 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரியாகவும் இருக்க வேண்டும். இயல்பான வெப்பநிலையை விடக் கடந்த 2016-ம் ஆண்டு 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பதிவான வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த வருடம், 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பதிவான வெப்பநிலை இயல்பான வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு 32, 34 டிகிரி எனப் பதிவாகிய சராசரி வெப்பநிலையானது, இந்த ஆண்டு 37,38,39 டிகிரி எனப் பதிவாகி உள்ளது. கடந்த மே மாதம் கோடையில் பதிவான உச்ச வெப்பநிலையே 41 டிகிரிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஏப்ரல் மாதம் நிலவிய வெப்பநிலையில் அதிகபட்சமே 38 டிகிரிதான்...

 

 

Date Actual Temp Hist. Avg.
Mon 18/7/2017 36° /28° 36°/27°
Tue 19/7/2017 37° /27° 36°/27°
Wed 20/7/2017 38° /25° 36°/27°
Thu 21/7/2017 39° /28° 36°/27°
Fri 22/7/2017 38° /29° 36°/27°
Sat 23/7/2017 39° /28° 36°/27°
Sun 24/7/2017 37° /29° 36°/27°
Mon 25/7/2017 36° /28° 36°/27°
Tue 26/7/2017 37° /28° 36°/27°

 

இதுபற்றி பேசிய சென்னை வானிலை மையத்தின் இயக்குநர், பாலச்சந்திரன், "கடலில் இருந்து குளிர்ந்த காற்றானது தரைப் பகுதிக்கு வராததே வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். இன்னும் மூன்று நாள்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும். 28-ம் தேதிக்கு மேல் காற்று அதிகரித்து மழை பெய்ய வய்ப்பு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக வீசும் கடல் காற்றும் தாமதமாக வீசுகிறது. உள் தமிழகத்தில் குறைவான மேகமூட்டம் காணப்படுகிறது. இன்னும் இரண்டு நாள்களுக்கு 3 அல்லது 4 டிகிரி வெப்பம் வெளியாகலாம்" என்றார்.

சித்திரையில் கத்தரி வெயில் முடிந்து ஆங்காங்கே மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. தற்போது நிலவும் வெப்பநிலை கோடை வெயிலைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

 


டிரெண்டிங் @ விகடன்