Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அமானுஷ்ய நினைவுகள்’ முதல் ‛இடைவெளி’ வரை... சென்னைப் புத்தகக் காட்சியும் சில புதிய புத்தகங்களும்!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகத் திருவிழா  நடைபெற்றுவருகிறது. பெருவாரியான சென்னைவாசிகளுக்கு  இப்படியொரு விழா நடப்பது தெரியுமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது திருவிழாவுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை. "லீவ் நாள்ல  வர்ற ஜனங்க கூட  இன்னைக்கு வரலீங்க"  என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லாவில் அமர்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்  புத்தக விற்பனையாளர் பழனி.

புத்தகத் திருவிழா

சென்னை புத்தக ஆர்வலர்களைப் பொறுத்தவரை ஜனவரியில் நடைபெறுவது மட்டுந்தான் Book Fair என்கிற மனப்பான்மை இருக்கிறது. காணும் பொங்கலுக்கு கடற்கரைக்குச் செல்வது போல வந்து திரளுவார்கள். ஆனால் மற்ற மாதங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களை சாலையில் போகும்போது எட்டிப் பார்ப்பதோடு சரி.

‘எதுக்குக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும்? அதான் PDF பண்ணி வாட்ஸப்ல அனுப்பி விட்டுடுறாங்களே’ என்று ஒரு படைப்பை  முறையற்ற வகையில் அணுகுபவர்கள் அதிகமாகி வருகிறார்கள். இப்படி நாம் வாசிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட புத்தகம் விற்பனை குறைந்து, அதை எழுதியவற்கான ‘ராயல்டி’ தொகையும் அதிகமாகக் கிடைக்காது. பதிப்பாளர்களும் நஷ்டம் அடைய வேண்டியிருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்களே வாங்கப்படாத சூழலில் பெரிய லாபத்தைக் காண முடியாத பதிப்பங்களின் தலையில் PDF கலாசாரம் பேரிடியாக இறங்க ஆரம்பித்திருக்கின்றன. சரி, PDF-ல் இல்லை நூலகத்தில்தான் போய் வாசிக்கிறோம் என்றாலும், சமகாலப் பிரச்னைகளைத் தொகுப்பாக பதிவு செய்த புத்தகங்கள் பரவலாக நூலகங்களுக்கு வராத வரையில் இதுபோன்ற கண்காட்சிகளை நல்வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேசமயம் ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையே படித்து முடிக்காத சூழலில் நுகர்வு கலாசாரத்தின் அடிமையாக வாங்கிக் குவிப்பதும் நல்லதற்கில்லை.

ஒரு சினிமா பார்த்து விட்டு வருவதற்கு தனிநபர் ஒருவருக்குக்  குறைந்தபட்சம் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை செலவு செய்யும் நாம், நம்முடைய வாழ்க்கை முழுதும் உடன் ஒரு வழிகாட்டியாக, உற்ற தோழனாக, நம் பிள்ளைகளின் கற்பனைத் திறனுக்குத் தீனி போடும் பெட்டகமாக, அறிவுத் திறப்பாக இருக்கப்போகிற புத்தகங்களுக்கு கொஞ்சம் பணம் செலவு செய்யக்கூட யோசிக்கிறோம். இம்மாதிரி புத்தகத் திருவிழாக்களில் அனைத்து நூல்களுக்கும்  10 சதவீதம் தள்ளுபடி கொடுத்தும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது பண்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கு ஒரு தடை என்றே கருதலாம்.

காரல் மார்க்சின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு மார்க்ஸ், ஏங்கல்ஸ் இவர்கள் எழுதிய நூல்களுக்கென்றே இந்த புத்தகத் திருவிழாவில் தனி அரங்கு அமைத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய நூல்களை 12 தொகுதிகளாக பாரதி புத்தகாலயம் முதன்முறையாக தமிழில் வெளியிடுகிறது. நம் ஊர் சிந்தனையாளர்கள் பேச்சுவாக்கில் மார்க்சியம் என்று அவ்வப்போது சொல்வதை இன்னும் எவ்வளவு நாள்கள்தான் குழப்பத்துடன் கவனிப்பது? அப்படி என்னதான் அந்த மார்க்சியம் என்கிற ஆவலுள்ளவர்கள் தவறவிடக் கூடாத ஏரியா இது. சில புதிய நூல்களும் வெளியாகி இருக்கின்றன. அதைப்பற்றிய  சிறிய அறிமுகத்துடன் பார்ப்போம்.

பறவையின் வாசனை - கமலா தாஸ் 

பறவையின் வாசனை சென்னை

மலையாள எழுத்தாளாரான கமலா தாஸின் 'என் கதை' என்கிற சுயசரிதை பன்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய அளவில் பேசப்பட்டது. அவரின் 140 கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த 16 கதைககளை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட்டிருக்கிறது. 

அமானுஷ்ய  நினைவுகள் -அசோகமித்திரன் 

அமானுஷ்ய  நினைவுகள்

அசோகமித்திரன் தன்  வாழ்வின் கடைசி காலத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பு.  இத்தொகுப்பைப் பற்றி "அந்திமக் காலங்களின் கதைகளுக்கான சலுகை எதுவும் தேவைப்படாமல் படைப்பாற்றலோடு நிற்கின்றன" என்கிறார் எழுத்தாளர் அரவிந்தன். காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. 

கடவுளால் எந்த நன்மையும் இல்லை - குட்டி ரேவதி

கடவுளால் எந்த நன்மையும் இல்லை 

பௌத்தக் கோட்பாடுகளை வைத்து எழுதியிருக்கும் நூல். புலம் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

நூற்றாண்டில் திராவிடன் - இரா. பகுத்தறிவு; 

நூற்றாண்டில் திராவிடன்

வெகுஜன நம்பிக்கைகளைப் பிரதிபலித்த இதழ்களுக்கு நடுவே சாதி, சமயம், மூடத்தனம், பெண்ணடிமை உள்ளிடட்ட முறைகளைக் கடுமையாக எதிர்த்த திராவிடன் இதழின் தொகுப்பான இந்நூல் ஒரு வரலாற்று ஆவணம். முரண்களரி படைப்பகம் வெளியிட்டிருக்கிறது.

GST ஒரே நாடு ஒரே வரி; 

GST ஒரே நாடு ஒரே வரி

ஜி. கார்த்திகேயன் எழுத, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நம்முடைய சமகால குழப்பங்களுக்கு இந்நூல் எத்தனை முக்கியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இடைவெளி - சம்பத்

 இடைவெளி - சம்பத்

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் அச்சாகி இருக்கிறது. விருட்சம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் 250-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 35,000-க்கும் அதிகமான புத்தகங்கள் நம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. தினமும் மாலை எழுத்தாளர்களுடன் "எழுத்தாளர் முற்றம்' என்கிற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

புத்தகக் காட்சி  வார நாள்களில் பிற்பகல் 2 மணியிலிருந்து 9 மணி வரையிலும். வார இறுதியான சனி, ஞாயிறு களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். வரும் 31-ம்  தேதியுடன் புத்தகக் காட்சி நிறைவடைகிறது. அனுமதி இலவசம் என்று இருந்தும் கவனிப்பாரற்று கிடக்கும் இடங்களில் புத்தகக் காட்சியும் அடக்கம் என்கிற வழமையை உடைத்தெறிவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close