வெளியிடப்பட்ட நேரம்: 06:14 (26/07/2017)

கடைசி தொடர்பு:07:25 (26/07/2017)

ஜுலை 27-ல் ஸ்டாலின் விசிட், தி.மு.க-அ.தி.மு.க வாக்குவாதம் முதல்வர் தொகுதியில் பதற்றம்!

பதட்ட சூழலில் எடப்பாடி

மிழ்நாட்டிலுள்ள ஏரிகளைத்  தூர்வாரும் பணிகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் , தமது கட்சியினருக்கு உத்தரவிட்டார். அதன்வழி தொடர்ச்சியாக ஆங்காங்கே தி.மு.க -வினர் ஏரிகளை தூர்வாரும் பணிகளை செய்துவருகின்றனர். இந்தவகையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள கச்சராயன் (12 ஏக்கர் பரப்பளவு) ஏரியை கடந்த 15 நாள்களாக சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க-வினர், மாவட்டச் செயலாளர் சிவலிங்கம்  தலைமையில் தூர்வாரும் பணிகளைச் செய்து வந்தனர். இப்பணிகளை பார்வையிட வருகிற வருகிற 27-ம் தேதி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வர இருக்கிறார். இந்த ஏரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதிக்குட்பட்டது. 'முதல்வரின் தொகுதியில், எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சென்று ஏரி தூர்வாருவதா? இது அ .தி.மு.க-வுக்கு கவுரவ பிரச்னை' என்று சேலம் அ .தி.மு.க-வுக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன. இந்நிலையில், அச்சப்பட்டது போலவே அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

டவரில் ஏறி தி.மு.க-வினர் போராட்டம்

தி.மு.க-வினர் பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அங்கே திரண்ட அ.தி.மு.க-வினர் , அங்குள்ள மண்ணை அள்ளிச் செல்லும் பணிகளைத் தொடங்கினர்.  நம்மிடம் பேசிய தி.மு.க மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் ரா.தமிழரசன்,  "இந்த ஏரி எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதிக்குட்பட்டு இருப்பதால் திட்டமிட்டு நேற்று இரவு முதல் கரைகளை உடைப்பது, மண்ணை அள்ளி அலங்கோலம் செய்வது போன்ற வேலைகளை அ.தி.மு.க-வினர் செய்துவருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் உடந்தையாக உள்ளனர். நாங்கள் எங்கள் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இங்கு பார்வையிடுவது குறித்து, அனுமதிக் கடிதம் எழுதி கொடுத்துள்ளோம். இந்நிலையில், வேண்டுமென்றே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலில் அ .தி.மு.க-வினர் இடையூறு செய்துவருகின்றனர். " என்றார் காட்டமாக. இதற்கிடையே தி.மு.க-வினர் சிலர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்யத் தொடங்கியுள்ளனர். அங்கே, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், மத்திய மா.செ வக்கீல் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா உள்ளிட்ட தி.மு.க-வினர் குவிந்து வருகின்றனர். அ .தி.மு.க-வினரும் குவிந்து வருவதால் , பிரச்னை ஏற்படாமல் இருக்க  அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது. தற்போது ஆர்.டி.ஓ மற்றும் எஸ்.பி ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தி.மு.க-வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.