”சட்டமன்றக் கூட்டத்தை வீணடித்துவிட்டனர்”- கிரண்பேடி காட்டம்

கார்கில் போரின் 18-வது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருக்கும் கார்கில் நினைவுச் சின்னத்துக்கு, ஆளுநர் கிரண்பேடி மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

கார்கில் போர்

காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததால் கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது. இந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், எண்ணற்ற வீரர்களையும் இழந்தது. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26-ம் தேதி, கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கிரண்பேடி

அதன்படி இன்று, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கார்கில் நினைவுச் சின்னத்தில், ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். அதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, “புதுச்சேரியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெற தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.  அதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்கிறேன். கடந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், மே மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தை வீணடித்துவிட்டனர். தேசிய விருதுபெற்ற கல்வியாளர்களைக்கொண்டு சென்டாக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், சென்டாக் கலந்தாய்வை ஒருபோதும் ஒத்தி வைக்கக்கூடாது. மீறினால், அது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகி விடும்” என்று  தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!