வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (26/07/2017)

கடைசி தொடர்பு:14:17 (26/07/2017)

"போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசு வேலை!" - தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்

 சாதிச் சான்றிதழ்

 இடஒதுக்கீட்டுக்காகத் தவறான தகவல்களைக் கொடுத்து சாதிச் சான்றிதழ்கள் பெறப்படுகின்றன. அதைப் பயன்படுத்தி அரசு வேலை, பதவி உயர்வை எளிதில் பெறுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. ஆனால், இடஒதுக்கீட்டை சிலர் தவறாகப் பயன்படுத்திவருகின்றனர்.  இதனால், தகுதியானவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் பரவலாக உள்ளது.

குமார்இதுகுறித்து, ஆதி பழங்குடியினர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் குமார் கூறுகையில், "தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில், மலையாளி என்ற எஸ்.டி பிரிவு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. பழங்குடியினப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் சிலர், மலையாளி சாதிச் சான்றிதழைப் போலியாகப் பெற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுகின்றனர். இதனால், பழங்குடியினப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சதவிகித இடஒதுக்கீடு, தகுதியானவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013-14-ம் ஆண்டு நடந்த மாஜிஸ்திரேட் பணிக்கான தேர்வில் தேர்ச்சிபெற்ற சென்னையைச் சேர்ந்த ஒருவர், இந்து மலையாளி என்ற எஸ்.டி பிரிவுக்கான இடஒதுக்கீட்டில், மாஜிஸ்திரேட் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வுசெய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவரின் சாதிச் சான்றிதழ் தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி சாதிச் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் மாவட்ட விஜிலென்ஸ் கமிட்டி ஆய்வு செய்தது. அப்போது, அவர் தவறான தகவல்களைக் கொடுத்து, மலையாளி சாதிச் சான்றிதழைப் பெற்றது தெரியவந்தது.

பழங்குடியினரின் கோயில்

இதுதொடர்பான அறிக்கையும் ஆதிதிராவிட நலத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அறிக்கை தவறு என்று கூறி, அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறுகளைத் தண்டிக்கவேண்டிய உயர் அதிகாரிகளே, அதற்கு உறுதுணையாக இருப்பது வேதனைக்குரியது. மேலும், தமிழகத்தில் தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தவறான தகவல்களைக் கொடுத்து சாதிச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களைச் சேகரித்துவருகிறோம். அந்த எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்"என்றார்.

தென்னிந்தியப் பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் இறை அருள் கூறுகையில், மலையின மக்களுக்கும்இறை அருள் மலைவாழ் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாத அதிகாரிகள்,  பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ்களைத் தவறானவர்களுக்குக் கொடுத்துவிடுகின்றனர். கடந்த 1950-ம் ஆண்டுக்கு முற்பட்ட வருவாய் ஆவணங்கள், பெற்றோர், உறவினர்களின் சாதிச்சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றைச்  சரிபார்த்த பிறகே, எஸ்.டி பிரிவினருக்கான சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும். ஆனால், முறையாக ஆவணங்களை ஆய்வுசெய்யாமல், இந்து மலையாளி சாதிச் சான்றிதழை சில அதிகாரிகள் கொடுக்கின்றனர். இதுவே, போலி சாதிச் சான்றிதழுக்கு வழிவகுக்கிறது. இதுதொடர்பான புகார் அடிப்படையில், கடந்த 2010ல் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ்., மலையாளி சாதிச்சான்றிதழ் தொடர்பாக நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியருக்கு அவசர உத்தரவைப் பிறப்பித்தார். அதில், 'இந்து மலையாளி சாதிச்சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகத் தகவல் வந்துள்ளது. எனவே, நிலம் மற்றும் வருவாய் ஆவணங்களைப் பரிசீலித்து, மலையாளி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால், மலையாளி சாதிச் சான்றிதழ்கள் பெற்ற 99 சதவிகிதத்தினரின் வருவாய் மற்றும் நில ஆவணங்களில், மலையாளி என்ற தகவல் இல்லை. தமிழக அரசின் உத்தரவுப்படி, மலையில் வசிப்பவர்கள் மட்டுமே மலையாளிகள். சமதளத்தில் வசிப்பவர்கள் மலையாளி என்ற சாதியைப் பெறத் தகுதியில்லை. எனவே, நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ-க்கள், போர்க்கால அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, 100 ஆண்டுகால நில ஆவணங்களை ஆராய்ந்து, போலியாகப் பெற்ற எஸ்.டி.மலையாளி சாதிச் சான்றிதழ்களை நீக்கம் செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று சகாயம் ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டுள்ளார். ஆனால், வழக்கம்போல சகாயத்தின் உத்தரவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, போலி சாதிச் சான்றிதழ்மூலம் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு பறிக்கப்படுவதைத் தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.

தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளி) பேரவையின் பொதுச் செயலாளர் அண்ணாமலை கூறுகையில், "கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், 7 லட்சம் பழங்குடியின மக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 60 முதல் 70 சதவிகிதம் பேர் மலையாளி இனத்தைச் சேர்ந்தவர்கள். மலையாளி என்ற சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. மேலும், தகுதியானவர்களுக்குகூட சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. சாதிச் சான்றிதழ் பெற்ற பிறகும் கல்வி, வேலை, பதவி உயர்வு பெறும்போது சிக்கல்கள் தொடர்கின்றன. எனவே, நடைமுறைச் சிக்கல்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

பழங்குடியினரின் வீடு

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த 1950-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழங்குடியினப் பட்டியலில், 40 சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், மலையாளி என்ற சாதி இடம்பெறவில்லை. 1953ல் வெளியிடப்பட்ட பட்டியலில் வடஆற்காடு, சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் மலையாளி என்ற பழங்குடியின மக்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 1976ல் தருமபுரி, வடஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், தென்ஆற்காடு, திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பழங்குடியினப் பட்டியலில் இடம்பெறாத உட்பிரிவுச் சாதியினர் மலையாளி என்ற சாதிச்சான்றிதழ்களைப் பெறுகின்றனர். இதுவே, சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7 லட்சத்து 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியின் உட்பிரிவுகள் தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக, பழங்குடியின மக்கள்குறித்த சரியான புள்ளிவிவரங்களைப் பெற முடியவில்லை. எனவே, பழங்குடியினப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், உட்பிரிவை மாற்றி எஸ்.டி.சாதிச் சான்றிதழ்களைப் பெற முயல்கின்றனர். அதற்கு, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசும், அந்தத் துறை அதிகாரிகளும் உள்ளனர்" என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்