வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/07/2017)

கடைசி தொடர்பு:21:03 (26/07/2017)

கன்னிமாரா நூலகத்தில் ஆய்வுமாணவர் உறுப்பினராக முடியாதா? - நூலகர் சொன்னது என்ன!

ஜூலை புத்தகக்காட்சி 2017

சென்னையில் நடந்துவரும் ஜூலை புத்தகக் காட்சியில் முதல் முறையாக நகரின் 13 நூலகங்களின் நூலகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. நூறு டிகிரிக்கும் மேல் நிலவிய கடுமையான வெயிலிலும் நூலகக் காதலர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 

கலந்துரையாடலில், பூ. மீனாட்சி சுந்தரம், (நூலகர், கன்னிமாரா பொது நூலகம்), செ. காமாட்சி, (நூலகர், அண்ணா நூற்றாண்டு நூலகம்), இளங்கோ சந்திரகுமார்,(மாவட்ட நூலக அலுவலர் சென்னை),கோ. உத்திராடம், (உ. வே. சாமிநாதையர் நூலகம்), ஜெகன் பார்த்திபன்,(நூலகர், தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகம்), க.சுந்தர், (இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்), இரா. சந்திரமோகன், (நூலகர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்), ரெ. முருகன், (இணை நூலகர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்), இரா. பெருமாள்சாமி,(நூலகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்), அபர்ணா, (நூலகர், பிரிட்டிஷ் கவுன்சில்), மகேஷ்(நூலகர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நூலகம்), கீதா அருண்,(நூலகர், கலாச்சேத்ரா நூலகம்), இந்து, (நூலகர், தக்ஷிணசித்ரா அருங்காட்சியகம் நூலகம்) ஆகியோர், தங்களின் நூலகங்களின் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துக்கூறினர். 

முதலில் பேசிய பெரியவர் ஒருவர், ”ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில், இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிள்ளையைப் போன்ற புத்தகத்தை நான் தொட்டுப் பார்க்கவிரும்பினேன்; ஆனால் அங்கிருந்த பணியாளரோ, என்னவகைப் புத்தகம் என்று சொல்லுமாறு, நூற்பட்டியலைக் காட்டினார்; நானோ அந்தப் புத்தகத்தைப் பார்க்கவிரும்பினேன், முடியவில்லை” என்றார். 

அவருக்குப் பதிலளித்த ரோ.மு.ஆ. நூலகப் பொறுப்பாளர் சுந்தர், “எந்த நூலையும் தரமுடியாது எனக் கூறுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என இப்போது சொல்வதால் எதுவும் செய்ய முடியாது. இனி அவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ளமுடியும். எப்போதும் வாருங்கள்” என்றார். 

ஈரோடு மாவட்டத்திலிருந்து வந்திருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேசுவரி, அண்ணா நூலகத்தின் பயன்பாடுகள் குறித்து கூறினார். ஆய்வாளரும் கவிஞருமான தி. பரமேசுவரி, ஆய்வு நூலகங்களில் சில நடைமுறைகளை எளிமைப்படுத்தினால், ஆய்வின் மூலம் உருவாகும் படைப்புகள் மேலும் சிறப்பாக இருக்கும் என்றார். 

கன்னிமாரா நூலகத்தில் வெளியூரிலிருந்து வந்து படிக்கும் ஆய்வுமாணவர்களுக்கு உள்ளூர் முகவரியைக் கேட்பதால் உறுப்பினர் ஆவது சிரமமாக இருக்கிறது என்று கூறினார். அதற்குப் பதிலளித்த கன்னிமாரா நூலகர் மீனாட்சிசுந்தரம், ''ஆய்வு மாணவர்கள் விடுதிக் காப்பாளரிடம் கடிதம் வாங்கிக்கொடுத்தால் உறுப்பினராக ஆகமுடியும்'' என்று கூறினார். 

தொடர்ந்த உரையாடலில், ” தமிழ்ப் புத்தகங்கள் அச்சிடப்பட்ட நாள் முதல் நடப்புவரை வெளியாகியுள்ள தமிழ்ப் புத்தகங்களின் தொகுப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். புத்தகச் சட்டப்படி வெளியாகும் ஒவ்வொரு புத்தகத்தின் படியையும் கன்னிமாரா நூலகத்துக்கு பதிப்பாளர்கள் அனுப்பினால், இந்தப் பணிக்கு உதவியாக இருக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 

அதற்கு பதிப்பாளர்கள் தரப்பிலிருந்து பாரதி புத்தகாலய நாகராஜன், “ இப்போது பல மட்டங்களில் நடந்துவரும் நூற்பட்டியல் ஆக்கத்தை , கன்னிமாரா நூலகமோ அரசின் வேறு எந்த அமைப்போ ஒரே மையப்பட்டியலாக்கமாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், அந்தப் பட்டியலையே, வெளியீட்டாளர்களோ விற்பனையாளர்களோ பயன்படுத்திக்கொள்ள முடியும். வெவ்வேறு பட்டியலாக்கத்தால் நடக்கும் குழப்பமும் நேரவிரயமும் தவிர்க்கப்படும்” என்றார். 

பதிலளித்த கன்னிமாரா நூலகர், மையப் பட்டியலாக்கம் முறைப்படி செய்யப்படும் என உறுதியளித்தார். 


டிரெண்டிங் @ விகடன்