வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (26/07/2017)

கடைசி தொடர்பு:19:07 (26/07/2017)

'நமது எம்.ஜி.ஆர்', இனி 'எனது' எம்.ஜி.ஆர்!... அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டின் தனி ஆவர்த்தனம்!

ஜெயலலிதா

ட்சிகள் உடைந்து அணிகளாக மாறுவதை தமிழக அரசியல் வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆனால் கட்சிக்கான அதிகாரப்புர்வ நாளேடு தனி அணியாக இயங்குவதை அதிமுகதான் அறிமுகப்படுத்தியிருக்கிறது இப்போது. அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இயங்கிவருகிறது நமது எம்.ஜி.ஆர். இதன் நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது கட்சிக்கென அதன் செயல்பாடுகள் தலைவர்களின் சுற்றுப்பயண அறிக்கைகள் நிர்வாக மாறுதல்கள் உள்ளிட்டவைகளை கட்சித்தொண்டர்களிடம் தெரிவிப்பதற்காக அண்ணா நாளிதழைத் தொடங்கினார். இதுவன்றி கே.ஏ.கிருஷ்ணசாமியின் தென்னகம் உள்பட பல பெயர்களில் கட்சிக்கென அப்போது பல பத்திரிகைகள் நடந்தன. ஆனாலும் அண்ணாவே அதிகாரப்பூர்வ நாளேடாக கட்சிக்கு இருந்தது. அதிமுக ஜெயலலிதா கட்டுப்பாட்டுக்கு வந்தபின் தனக்கென ஒரு நாளேடு வேண்டும் என விரும்பி 1988 ம் ஆண்டு நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் துவங்கப்பட்டது. இதன் நிறுவனராக ஜெயலலிதாவே இருந்தார்.

ஜெயலலிதாவின் ஆரம்ப கால பத்திரிகையாளர் நண்பர்கள் இதன் ஆசிரியர் குழுவில் அப்போது இடம்பெற்றனர். இப்போது இதன் ஆசிரியராக இருப்பவர் மருதுஅழகுராஜ். ஜெயலலிதா இருந்தவரை கட்சியைப்போன்றே கட்சிப்பத்திரிகையான நமது எம்.ஜி.ஆருக்கும் ஒரே குரல்தான். ஜெயலலிதாவை மீறி எந்த சிறுவார்த்தையும் அதில் இடம்பெறாது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சி இரண்டு அணிகளானது. கட்சித்தலைமைப் பதவிக்கு வந்த சசிகலாவுடன் முரண்பட்டு ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டுவருகிறார். தான் சிறை செல்லநேர்ந்தபோது அதிகாரப்பொறுப்பாக முதல்வர் பதவியில் எடப்பாடியை அமரவைத்தார் சசிகலா.

தான் ஆட்சியமைக்காமல் போனதில் மோடியின் பங்கு அதிகம் என்பதை உணர்ந்த சசிகலா தங்கள் குடும்பத்தின் மீது மோடி அதிக கோபத்தில் இருப்பதாக கருதிய நேரத்தில் அதை உறுதிப்படுத்துவதுபோல்  கட்சியின் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைது செய்யப்பட்டார். இப்படி மத்திய அரசின் மீது சொல்லமுடியாத எரிச்சலில் சசிகலா, தினகரன் தரப்பு இருக்க, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு பல விஷயங்களில் அனுசரணையாக போக்கை கடைபிடித்தது. 

மருது அழகுராஜ்

இந்த நிலையில் கட்சிப்பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர்,  3 அணிகளில் எந்த அணியின் சார்பாக கருத்துக்களை வெளியிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தது. எந்த நிலையிலும் அரசை விட்டுக்கொடுக்காமல் அரசு செய்திகள் தொடர்ந்து வெளியாகின. கமல் விவகாரத்தில் அரசை எதிர்த்த அவரது செயலை கவிதை கட்டுரைகள் மூலம் விளாசித்தள்ளியது நமது எம்.ஜி.ஆர். அதேசமயம் மற்ற விஷயங்களில் குழப்பங்கள் தெளிவாக தெரிந்தன. இதன் ஆசிரியர் மருதுவும் தனது முகநுால் பக்கத்தில் இந்த குழப்பத்தை உறுதிப்படுத்துவதுபோல் அணிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி பல பதிவுகளை வெளியிட்டார்.

பத்திரிகையின் இன்றைய நிர்வாகம் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் பொறுப்பில் இருப்பதால் சசியின் ஆதரவு நிலைப்பாட்டில் நின்று எல்லா அணிகளும் இணையவேண்டும் என்பதை சூசகமாக சொல்லின அந்த பதிவுகள். ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான். அது எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நமது எம்.ஜி.ஆரில் அரசின் செய்திகளும் அவ்வப்போது இருட்டடிப்பு செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று சித்திரகுப்தன் எனும் பெயரில்’மூச்சுமுட்ட பேச்சு, மூன்றாண்டு போச்சு’எனும் தலைப்பில் அரைப் பக்கம் நையாண்டி கருத்துப்படம் வெளியானது. இது நேரடியாக பாஜக அரசின் ஆட்சியை விமர்சித்தது. சித்திரகுப்தன் என்ற பெயரில் அதை எழுதியவர் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ்.

எம்.ஜி.ஆர்தொடர்ந்து பாஜக அரசின் பசு காக்கும் கொள்கைளை கிண்டலடித்து, அவரே, ’நாடு கடக்கும் அரசா, மாடு காக்கும் அரசா’ எனத் தொடங்கி, ’எந்திர தந்திர மந்திரத்தை நம்பியே, எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு’ என மத்திய பாஜக அரசைப் பற்றி விமர்சனம் வைத்தது. ஆளும் கட்சி மத்திய அரசுடன் அணுசரனையான போக்கை கடைபிடித்துவரும் நிலையில் அக்கட்சியின் பத்திரிகை இத்தனை பட்டவர்த்தமாக அதை கிண்டலடிப்பது கொஞ்சம் புதிய அரசியல்தான். 

அதேசமயம் மத்திய அரசின்பிடி சசிகலா விவகாரத்தில் இறுகுவதை உறுதிப்படுத்துவதுபோல சசிகலா, சிறையில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவருவதாக பரபரப்பாக செய்தி வெளியாகின. கர்நாடக டிஐஜி ரூபாவினால் வெளியான இந்த விவகாரத்தின் பின்னணி பாஜக என சசிகலா தரப்பு கருதுகிறது. இதனால் இப்போது முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு எதிர்ப்பான நிலை எடுத்திருக்கிறது அந்த பத்திரிகை. இதை உறுதிப்படுத்துவதுபோல் இன்றும் அந்த பத்திரிகையில் மத்திய அரசைக் கண்டித்து  கவிதை வெளியாகியுள்ளது. 

கச்சத்தீவை தாரை வார்த்து
கடல்சார் உரிமை இழந்தோம்!
காவிரியை மீட்பதற்கு
காலமெல்லாம் முயன்றோம்!
முல்லையாற்று உரிமைக்கு
மோதிச் சண்டை புரிந்தோம்!
பாலாறும் கோளாறாக
பரிதவித்து நின்றோம்!
மேகதாதில் சூது சூழ
மேலும் துன்பம் கண்டோம்!
மீத்தேன் வந்து அச்சுறுத்த
மீளாத் துயரில் உழன்றோம்!
நெடுவாசல் துயராலே
நிம்மதியை இழந்தோம்!
கதிராமங்கலம் கண்ணீர் துடைக்க
உங்களைத் தேடி வந்தோம்!
'உதய்'யை ஒப்புகிட்டு
ஒத்துழைப்பு தந்தோம்!
சேவை மற்றும் சரக்கு வரிக்கு
சேர்ந்து கோஷம் புரிந்தோம்!
'நீட்'டுக்கும் தலைவணங்கி
நெருக்கடியில் நெளிந்தோம்!
'எய்ம்ஸ்' மருத்துவமனை
எப்போது வரும்னு
எதிர்பார்ப்பில் கரைந்தோம்!
வர்தா புயல் நிதிக்கு கையேந்தி
வழிபாத்துக் கிடந்தோம்!
வறட்சி நிவாரணம் வருமான்னு
விழி பிதுங்கி நடந்தோம்!
கேட்டது எதுவும் கிடைக்கல...
கெட்டது எதுவும் நடக்கல
தமிழிசை வந்து தனிக்கதை சொல்ல...
எச்.ராஜாவோ 'ஆண்ட்டி இண்டியன்னு' னு
ஆவேசம் கொள்ள...
ஆளுக்கு ஆளு
இலவசமா
அறிவுரைகள் அள்ள...
கூடவே கழகங்களில்லா தமிழகம்னு
கலர் கலரா கனவுகளில்
காவிகள் துள்ள...
கன்னித் தமிழ் பூமியின் கோப அலையை திசைதிருப்ப
காதல் கிழவரசனோ
கழக அரசைப் பழித்து கதைகள் பல சொல்ல...
மாற்றாந்தாய் போக்கை வெல்ல
மன்றாடுது தமிழுலகம்!
மதியாலே சதியை வெல்வோம்! 
- என முடிகிறது இந்தக் கவிதை. சித்திரகுப்தன் என்ற பெயரில் இதை எழுதியிருப்பவர் ஆசிரியர் மருது அழகுராஜ்.

அதிமுகவில் இருந்து உடைந்த ஓ.பி.எஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையும் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் பவ்யம் காட்டிக்கொண்டிருக்கும் நிலையில், ஆளும் கட்சியின் அதிகார்ப்புர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர், இப்படி தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்திருப்பது, ஆளும் அரசுக்கும் சசிகலா குடும்பத்தாருக்கும் எழுந்துள்ள மோதலை வெட்டவெளிச்சமாக்குகிறது. மேலும் எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவரும் தங்கள் எதிர்காலம் கருதி மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையில் எடுத்துவிட்டாலும் சசிகலா தரப்பு அதில் உறுதியாக நிற்பதோடு பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தயாராகிவருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த கவிதைகளும் கட்டுரைகளும்.

எடப்பாடி பழனிசாமி

இந்த பூசல் தொடர்ந்தால் இனி அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் எடப்பாடி தரப்பினர் இருட்டடிப்பு செய்யப்படுவதோடு, பின்னாளில் நமது எம்.ஜி.ஆர், முழுக்க முழுக்க சசிகலா தரப்பினரின் அரசியல் கேடயமாக மாறிவிடும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். எல்லாருக்கும் பொதுவான கட்சிப்பத்திரிகையாக இதுவரை இருந்த 'நமது எம்.ஜி.ஆர்' இனிவருங்காலங்களில் சசிகலா தரப்பினரின் கருத்துக்களை மட்டும் தாங்கிவரும் 'எனது எம்.ஜி.ஆர்' ஆகிவிடும் என்கின்றனர்  அவர்கள்.

அதிமுக பிளவு அடுத்தகட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்