காஜல் அகர்வால் மீது கவுன்சிலில் புகார் அளித்த தயாரிப்பாளர்! | Complaint against Kajal agarwal in Producer Council

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (26/07/2017)

கடைசி தொடர்பு:19:54 (26/07/2017)

காஜல் அகர்வால் மீது கவுன்சிலில் புகார் அளித்த தயாரிப்பாளர்!

தமிழ் திரைப்படங்களின் கேரள உரிமையைப் பெற்று அங்கே வெளியிட்டுவந்த விநியோகஸ்தர் சிபு, விக்ரம் நடித்து வெளிவந்த 'இருமுகன்' திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். 'என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த 'இருமுகன்' படத்தின் ஹீரோயினாக நடிப்பதற்காக முதலில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தோம். அப்போது சம்பள அட்வான்ஸாக 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பிறகு, காஜலுக்கு பதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து 'இருமுகன்' வெளியானது. நான் காஜல் அகர்வாலுக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை இதுவரை அவர் திருப்பித் தரவில்லை. தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் காஜலிடம் பேசி எனது பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் கொடுத்திருக்கிறார். இது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் காஜல் அகர்வாலுக்கும் நடக்கும் இரண்டாவது பண பஞ்சாயத்து.


kajal

           

 ஏற்கெனவே ஒருமுறை உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து, தயாரித்த 'இது கதிர்வேலன் காதல்' படத்துக்கு முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் காஜல் அகர்வால். அந்தபடத்துக்காக காஜலுக்கு சம்பள அட்வான்ஸ் பணமாக 50 லட்சம் கொடுத்தனர். அதன்பின் என்ன மாயமந்திரம் நடந்ததோ தெரியவில்லை காஜலை நீக்கிவிட்டு நயன்தாராவை நாயகியாக்கி நடிக்க வைத்து 'இது கதிர்வேலன் காதல்' படத்தை ரிலீஸ் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அதன்பிறகு, 'காஜல் அகர்வாலுக்கு நான் கொடுத்த 50 லட்சத்தை திருப்பி வாங்கிக்கொடுங்கள்' என்று கவுன்சிலில் புகார் கொடுத்தார் உதயநிதி. கவுன்சில் சார்பாக காஜல் அகர்வாலிடம் பேசியபோது, ' நான் தெலுங்கு படத்துக்காகக் கொடுத்த கால்ஷீட் தேதிகளை ரத்து செய்துவிட்டு 'இது கதிர்வேலன் காதல்' படத்துக்காகக் கொடுத்திருந்தேன். என் கால்ஷீட்டை வாங்கி வீணடித்துவிட்டனர். அதனால் அட்வான்ஸ் பணத்தைத் திரும்பித் தர மாட்டேன்' என்று  பதில் கொடுத்தார் காஜல்.

அதன்பின், கவுன்சில் பலமுறை நடத்திய பஞ்சாயத்துக்குப் பிறகு, 10 லட்சம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் காஜல் அகர்வால். இப்போது மீண்டும் 'இருமுகன்' படத்துக்காக கவுன்சிலில், காஜல் மீது பணம் பற்றிய புகார் பட்டியல் வாசித்து இருக்கிறார் தயாரிப்பாளர் சிபு. காஜலிடம் அட்வான்ஸ் பணம் குறித்து பேசுவதாக சிபுவிடம் உறுதிகொடுத்து இருக்கிறது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம். இந்நிலையில், விஜய் நடித்து தீபாவளிக்கு வரவிருக்கும் 'மெர்சல்' படத்தில் முக்கியமான நாயகியாக காஜல் அகர்வாலும், அஜித் நடித்து ஆகஸ்ட் 10-ம்தேதி ரிலீஸாக இருக்கும் 'விவேகம்' படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க