வெளியிடப்பட்ட நேரம்: 22:52 (26/07/2017)

கடைசி தொடர்பு:22:52 (26/07/2017)

கார்கில் தினம் - வெற்றி எட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே

உலகுக்கே பஞ்சசீல கொள்கையை அளித்த அமைதியான நாடு இந்தியா. அன்றும் இன்றும் எப்போதுமே சமாதானத்தை விரும்பும் நாடாகவே இந்தியா இருந்து வந்துள்ளது. எனினும் இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் நம்மை சீண்டி தொல்லைக்கு ஆளாக்கிய பிறகே நாம் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. அப்படித்தான் 1999-ம் ஆண்டு மே மாதத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் ராணுவம் எரிச்சல் படுத்தியது. ஆம், பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் உண்டாகும் பொழுதெல்லாம் அது இந்தியாவை வம்புக்கு இழுக்க பார்க்கும். அப்படித்தான் 1999-ம் ஆண்டு இந்தியாவுக்குச் சொந்தமான கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சொந்தம் கொண்டாடத் தொடங்கியது. மே மாத வாக்கில் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைய செய்தனர். அது முறியடிக்கப்பட்ட கார்கில் தினம் இன்று.

கார்கில் தினம்

 மே மாதம் 3-ம் நாள் இந்தியாவின் கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது இந்திய ராணுவத்தால் கண்டறியப்பட்டது. இதனால் இந்திய  ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து தனது படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது. ஜூன் 6-ம் தேதி இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த ஆக்கிரமிப்பை காஷ்மீர் தீவிரவாதிகள் மீது பழி சொல்லி தப்பித்த பாகிஸ்தான், இப்போது நேரடியாக இந்திய தாக்குதலை நேர்கொள்ள வேண்டி வந்தது. ஜூன் 15-ம் நாள் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு கேட்டும் பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதனால் இந்திய இராணுவம் கார்கிலில் தனது மும்முனைத் தாக்குதலைத் தீவிரமாக்கியது. பாகிஸ்தான் திணறத் தொடங்கியது. ஜூலை 14 அன்றே பாகிஸ்தான் ராணுவம் தோல்வியடைந்து தனது நாட்டுக்குள் பின்வாங்கி விட்டது. எனினும் இங்கொன்றும் அங்கொன்றுமாக கலகக்காரர்களால் நடந்த தாக்குதல்கள் ஜூலை 25 அன்று முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 26-ம் நாள் கார்கில் ஆக்கிரமிப்பு பிரச்னை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது.

இது இந்தியாவின், இந்திய ராணுவத்தின், மாபெரும் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. நாடெங்கும் இந்த நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்தப் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவாக கார்கில் தினம் ஆண்டுதோறும் இந்த ஜூலை 26-ம் நாளை அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கார்கில் தினமான இந்நாளில் நமக்காக உயிர் விட்ட தியாக தீபங்களை நம் நெஞ்சில் நிறுத்துவோம். எல்லா நேரத்திலும் நம்மை காத்து நிற்கும் நம் சகோதர வீரர்களை வாழ்த்துவோம். வாழ்க இந்தியா. வெல்க இந்தியா.