''நீட் வேண்டும் என்று அழுகுரல் கேட்கிறது..!'  ஹெச்.ராஜா வைக்கும், 'ட்விஸ்ட்' இதுதான்..!


''நீட் தேர்வு நடத்திய பின் நீட்-க்கு விலக்கு என்பது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதுபற்றி, என்னிடம் பேசிய மாணவர்களின் சோகமும், அழுகுரலும் என்னை வெகுவாக பாதித்துள்ளது என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.


தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வாங்கி, மாநில பாடத்திட்டத்தின்படி கலந்தாய்வு வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டும், நீட் வேண்டாம் என்று ஒருமனதாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜூலை 25-ம் தேதி டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் 'இந்த ஆண்டு நீட் வேண்டாம்' என்று வலியுறுத்தி இருக்கிறார். அதைப் பிரதமர் மோடியும் ஏற்றுக் கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, அவரது முகநூல் பக்கத்தில், ''கடந்த 3 நாள்களாக 100-க்கும் மேற்பட்ட செல்லிட பேசி் அழைப்புகள் வந்தன. அனைத்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடமிருந்தே வந்துள்ளன. அதில் பெரும்பாலும் ஸ்டேட் போர்ட் பள்ளிகளில் படித்த கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் அதிகம். சிலர் 2015, 2016 ஆண்டுகளில் கட்-ஆப் மதிப்பெண் பெறமுடியாமல் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகள் கல்வியைத் தொடராமல் நீட் தேர்வுக்குத் தயாரானவர்கள். 

இன்று தேர்வு நடத்திய பின் நீட்-க்கு விலக்கு என்பது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முறையிலும் இட ஒதுக்கீடுகள் உண்டு. எனவே, சமூகநீதி கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் நீட் தேர்வு ரத்து என்பது அதர்மமாகும். என்னிடம் பேசிய மாணவர்களின் சோகமும், அழுகுரலும் என்னை வெகுவாக பாதித்ததால் என் மனசாட்சியின் கட்டளைப்படி இப்பதிவு'' என்று எழுதியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!