கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு.! | O.Panneerselvam aid accepts to give a Controversial well to the people

வெளியிடப்பட்ட நேரம்: 21:48 (26/07/2017)

கடைசி தொடர்பு:10:01 (27/07/2017)

கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு.!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான சர்ச்சைக்குரிய கிணற்றை ஊர் மக்களுக்குத் தானாமாக வழங்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் ஒரு மாத காலத்துக்கு மேலாக நீடித்த மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

o.panneerselvam

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமியின் பெயரில் இருந்த ராட்சத கிணற்றால் அப்பகுதியில் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக தடைபட்டது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்தக் கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள 18 சென்ட் நிலம் அவரது நண்பர் சுப்புராஜ் என்பவரது பெயருக்கு எழுதி வைக்கப்பட்டது. 90 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு கிணற்றை நம்பி இருக்கும் 44 ஏக்கர் நிலத்தை கிராம மக்கள் வாங்கினால்தான் கிணறு தரப்படும் என்று சொல்லி உறுதியளித்த பிறகு, தனது நண்பருக்கு நிலம் விற்கப்பட்டதை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிணற்றை மீட்டால்தான் கிராமம் பிழைக்கும் என்ற சூழலில், தொடர் போராட்டங்கள் நடத்தி கிணற்றை மீட்கலாம் என்று நேற்று நடந்த ஊர் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சுமார் ஆயிரம் பேர் திண்டுக்கல் − பெரியகுளம் சாலையின் ஓரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி கிராம மக்கள் சுமார் 400 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், கிராம முக்கியஸ்தர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 சென்ட் நிலம் கிராமத்துக்குத் தானமாக எழுதி வைக்கப்படும் என்றும், கிணற்றை சுற்றியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் வேறெந்த கிணற்றுப் பணிகளும் செய்ய மாட்டோம் என்றும் ஓ.பி.எஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு நடத்தப்படும் என்றும் இருதரப்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்த மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.