டூவீலர் பதிவெண்ணைக் கொண்டு மணல் கடத்திய லாரி - திருப்பூரில் சிக்கியது..!

இரு சக்கர வாகனப் பதிவு எண்ணை, சரக்கு லாரியின் நம்பர் பிளேட்டில் மாற்றி, மணல் கடத்தியவர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

 

திருப்பூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியில் இன்று ஊரகப் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றிக்கொண்டு அவ்வழியே வந்த சரக்கு லாரி ஒன்றை நிறுத்திய போலீஸார், லாரி ஓட்டுநரிடம் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.

தன்னிடம் வைத்திருந்த ஆவணங்களை போலீஸாரிடம் எடுத்து கொடுத்திருக்கிறார் லாரியின் ஓட்டுநர். மணல் லாரியின் ஆவணங்களை போலீஸார் சோதனையிட்டுப் பார்க்கையில், லாரியில் மாட்டப்பட்டு இருந்த நம்பர் பிளேட் தவறாகவும், அதில் இரு சக்கர வாகனகத்தின் பதிவு எண் எழுதப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. சந்தேகம் அடைந்த போலீஸார் லாரியின் ஓட்டுநரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதன் பிறகுதான் தவறை ஒத்துக்கொண்டிருக்கிறார் ஓட்டுநர். 

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டால், இணையத்தில் மாதம் இருமுறை மட்டுமே பதிவு செய்து மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மணல் தேவை அதிகளவு இருப்பதால், இருசக்கர வாகனத்தின் பதிவெண்களையும் பயன்படுத்தி லாரியில் தொடர்ந்து மணல் அள்ளி வருகிறோம் என்றிருக்கிறார் ஓட்டுநர். இதையடுத்து காவல்துறையினர் மணல் லாரியைப் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வருவாய்த்துறையினரின் விசாரணையில் மணல் அள்ளப் பயன்படுத்திய இருசக்கர வாகனப் பதிவு எண் சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமானது என்றும், மணல் ஏற்றி வந்த லாரி கும்பகோணத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!