வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (27/07/2017)

கடைசி தொடர்பு:17:20 (09/07/2018)

மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பு மானிய திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் நரேந்திரமோடி

ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைக்க வரும் பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான நாளை, ராமேஸ்வரம் அருகே இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நாளை காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வரும் மோடி அங்கிருந்து கார் மூலம் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்துக்குச் செல்கிறார். 

அப்துல்கலாம் நினைவிடம்
அங்கு கலாம் நினைவிடத்தின் முன்பு உள்ள கம்பத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைக்கும் பிரதமர்,  அதனைத்தொடர்ந்து கலாம் நினைவிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் நினைவிடத்தின் பின் பகுதியில் உள்ள கலாமின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் அதைப் பார்வையிடுகிறார். பின்னர் கலாம் இன்டர்நேஷனல் பவுன்டேஷன் சார்பில் நாடு முழுவதும் செல்ல இருக்கும் கலாம் வாழ்க்கை வரலாற்றுச் சிறப்பு பேருந்தினை துவக்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து மண்டபம் முகாம் மரைக்காயர் பட்டினத்தில் உள்ள கடலோர காவல் படை அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் அயோத்தி-ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர ரயிலை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பசுமை ராமேஸ்வரம் திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி பாக்நீரிணைப் பகுதி மீனவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்துக்கான பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் ஆணையை வழங்கி உரையாற்றுகிறார். 

ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
இந்த விழாவில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வெங்கைய நாயுடு மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் பங்கேற்கும் இந்த நிகழ்சிகளுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கடலோரப் பகுதிகளிலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கலாம் நினைவிடம் மற்றும் விழா நடைபெறும் இடம் ஆகியவற்றில் ஆளில்லா விமானத்தின் மூலம் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.